நியூயார்க்:
அமெரிக்காவின் 47-வது ஜனாதிபதியாக இரண்டாவது முறையாக பதவியேற்ற டொனால்ட் டிரம்ப், “அமெரிக்காவின் பொற்காலம் மீண்டும் கொண்டுவரப்படும்” என உறுதியளித்திருந்தார். அதனை நடைமுறைப்படுத்தும் நோக்கில், தனது புதிய ஆட்சிக் காலத்தின் தொடக்கத்திலேயே பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

அமெரிக்க நிதி நிலையை வலுப்படுத்தும் முயற்சியாக, டிரம்ப் அரசு பல நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்க முடிவு செய்துள்ளது. அதன்படி, சீனா, கனடா, இந்தியா உள்ளிட்ட முக்கிய வர்த்தக நாடுகளுக்கு கடுமையான வரி விதிப்புகளை அவர் உத்தரவிட்டுள்ளார்.
இதேபோல், ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நாடுகளுக்கும் இந்த வரிகள் விதிக்கப்பட உள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார். இதற்காக 1977 ஆம் ஆண்டின் “சர்வதேச அவசர பொருளாதார அதிகாரச் சட்டம்” பயன்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்த உத்தரவு அரசியலமைப்புச் சட்ட விதிகளுக்கு முரணானது என எதிர்க்கட்சிகள் மற்றும் சில தொழில் அமைப்புகள் குற்றம்சாட்டின. நாடாளுமன்ற அதிகாரம் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது எனவும் டிரம்ப் மீது குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், இறக்குமதி பொருட்களை சார்ந்த நிறுவனங்கள் “இந்த புதிய வரி காரணமாக நாங்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறோம்” என வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்தன.
இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. விசாரணையில், டிரம்ப் அரசாங்கம் முன்பே விதித்திருந்த சில வரி நடவடிக்கைகள் செல்லாது என நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர்.
இதையடுத்து, டிரம்ப் மீண்டும் அதிரடி முடிவு எடுத்து “உலகளாவிய 10 சதவீத வரி விதிப்பு” என்ற புதிய உத்தரவை வெளியிட்டுள்ளார். அமெரிக்காவுடனான இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, இந்தியாவும் இந்த புதிய வரியை கட்டாயம் செலுத்த வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
இதுகுறித்து வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது:
“இந்த புதிய 10 சதவீத உலகளாவிய வரி உடனடியாக அமலுக்கு வருகிறது. இது முறையற்ற வர்த்தக நடைமுறைகள் மற்றும் கட்டணச் சீர்மையை நிலைநிறுத்தும் நோக்கத்துடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவுடன் வர்த்தகம் மேற்கொள்ளும் அனைத்து நாடுகளும் இந்த விதிகளுக்கு இணங்க வேண்டும்,” என அவர் கூறினார்.
மேலும், “அடுத்த உத்தரவு வெளிவரும் வரை இந்தியாவுக்கும் இந்த 10 சதவீத வரி விதிப்பு தொடரும்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த புதிய வரி விதிப்பின் மூலம் அமெரிக்கா – இந்தியா வர்த்தக உறவுகள் மீண்டும் சிக்கலான நிலையை எதிர்கொள்ளும் வாய்ப்பு இருப்பதாக பொருளாதார வட்டாரங்கள் கருத்து தெரிவித்து வருகின்றன.