வாஷிங்டன்:

அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப், உலக வர்த்தகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் அனைத்து நாடுகளுக்கும் தற்காலிகமாக 10 சதவீத வரி விதிக்க உத்தரவிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் டிரம்ப், இந்தியா, சீனா உள்ளிட்ட 75-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரஸ்பர வரிகள் விதித்திருந்தார். அமெரிக்காவுக்கு எதிராக பல நாடுகள் அதிக வரிகளை விதித்து வருவதாக குற்றம் சாட்டி, அதற்குப் பதிலடியாக “சர்வதேச அவசர பொருளாதார அதிகாரச் சட்டம் – 1977” என்ற சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கையை மேற்கொண்டார்.

அமெரிக்காவின் இந்த வரி முடிவுக்கு எதிராக பல்வேறு நாடுகள் மற்றும் எதிர்க்கட்சிகள் அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கை விசாரித்த 9 நீதிபதிகள் கொண்ட அமர்வில், 6 நீதிபதிகள் பெரும்பான்மை தீர்ப்பாக, “வரி விதிக்கும் அதிகாரம் பாராளுமன்றத்துக்கே வழங்கப்பட்டுள்ளது; நிர்வாகத்துக்கு அல்ல” என்று தெரிவித்தனர். மூன்று நீதிபதிகள் மட்டும் டிரம்பின் நடவடிக்கை சட்டபூர்வமானது என தெரிவித்தனர். இதன் அடிப்படையில், டிரம்ப் விதித்திருந்த வரிகள் செல்லாது என தீர்ப்பளிக்கப்பட்டது.

இந்த தீர்ப்பு டிரம்ப் நிர்வாகத்திற்கு பெரிய பின்னடைவாக அமைந்தது. இதனால் அதிபர் டிரம்ப் உடனடியாக புதிய உத்தரவை வெளியிட்டு, “அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்யும் அனைத்து நாடுகளுக்கும் அரசியலமைப்பு சட்டம் 122-ன் கீழ் தற்காலிகமாக 10 சதவீதம் வரி விதிக்கப்படும்,” என்று அறிவித்தார்.

டிரம்ப் கூறியதாவது:
“அரசியலமைப்பு சட்டத்தின் 122-ம் பிரிவின் கீழ், அனைத்து நாடுகளுக்கும் 150 நாட்கள் வரை 15 சதவீதம் வரி விதிக்க அரசுக்கு அதிகாரம் உண்டு. இதன் அடிப்படையில், தற்காலிகமாக 10 சதவீத வரி அமல்படுத்தப்படுகிறது. இது உலக வர்த்தகத்தில் சமநிலையை ஏற்படுத்தும் ஒரு முக்கியமான நடவடிக்கை,” என்றார்.

அவர் மேலும் கூறியதாவது, “வர்த்தக விரிவாக்கச் சட்டம் – 1962” பிரிவு 232 மற்றும் 301 ஆகியவற்றின் கீழ் ஏற்கனவே விதிக்கப்பட்ட வரிகள் தொடரும். புதிய வரி, அந்தச் சட்டங்களுக்கான கூடுதல் நடவடிக்கையாக இருக்கும்,” என்றும் தெரிவித்தார்.

புதிய உத்தரவில் கையெழுத்திட்ட பின்னர், டிரம்ப் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டதாவது:
“இந்த உலகளாவிய புதிய வரி உடனடியாக அமலுக்கு வருகிறது. அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்யும் அனைத்து நாடுகளும் இதை பின்பற்ற வேண்டும்,” என கூறினார்.

அதே நேரத்தில், சில பொருட்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதில் கனிமங்கள், இயற்கை வளங்கள், உரங்கள், ஆரஞ்சு மற்றும் மாட்டிறைச்சி போன்ற சில வேளாண் பொருட்கள், மருந்துகள், மின்னணு சாதனங்கள் மற்றும் சில வாகனங்கள் அடங்கும்.

புதிய வரி நடைமுறை வரும் 24-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இது தற்காலிகமானது என்றும், 150 நாட்களுக்கு பின்னர் தொடர வேண்டுமெனில் பாராளுமன்றத்தின் ஒப்புதல் அவசியம் என்றும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

இந்த உத்தரவின் மூலம், இந்தியாவுக்கு விதிக்கப்பட்டிருந்த 18 சதவீத வரி தற்போது தற்காலிகமாக 10 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. எனினும், இது நிரந்தர மாற்றமல்ல. வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் முடியும் வரை இந்த வரி நடைமுறையில் இருக்கும் என அமெரிக்க அரசு விளக்கம் அளித்துள்ளது.

டிரம்பின் இந்த புதிய வரி உத்தரவு, உலகளாவிய பொருளாதாரத் துறையில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.