சென்னை:

தமிழ் திரைப்பட உலகம் பெரும் ஆவலுடன் எதிர்நோக்கும் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இணை நடிப்பு திரைப்படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 47 ஆண்டுகளுக்குப் பிறகு இரு லெஜண்டுகளும் ஒரே திரையில் இணைவதால், ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில், ரஜினிகாந்த் நடிக்கும் தனது 173-வது படம் தற்போது தயாரிப்பில் உள்ளது. இதை ‘டான்’ படத்தின் இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்குகிறார். அந்தப் படப்பிடிப்பு முடிந்தவுடன், இருவரும் இணைந்து நடிக்கவுள்ள புதிய திரைப்படம் உருவாகவுள்ளது.

இந்த மாபெரும் கூட்டணித் திரைப்படத்தை ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் சார்பில் இன்பன் உதயநிதி ஸ்டாலின் தயாரிக்க உள்ளார். இப்படத்தை பிரபல இயக்குநர் நெல்சன் திலீப்ப்குமார் இயக்கவுள்ளார். இசையமைப்பாளராக அனிருத் ரவிச்சந்தர் இணைந்துள்ளார்.

இப்படத்தில் ஒளிப்பதிவாளராக பிரபல சினிமாடோகிராபர் ராஜீவ் மேனன் பணியாற்றுகிறார். 2013-ல் வெளிவந்த ‘கடல்’ திரைப்படத்துக்குப் பிறகு, அவர் கடைசியாக ‘புத்தம் புது காலை’ வெப் தொடருக்காக ஒளிப்பதிவு செய்திருந்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கமல்–ரஜினி கூட்டணியில் இணைவது சினிமா ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இப்படத்திற்கான முதல் புரோமோ வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது. “KHxRK” என குறியிடப்பட்டுள்ள இந்த புரோமோவில், கமல்ஹாசனும் ரஜினிகாந்தும் இணைந்து இயக்குநர் நெல்சனிடம் “யார் ஹீரோ?” என கேட்கும் நகைச்சுவை கலந்த காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அந்த ஒரு காட்சி வெளியான சில நிமிடங்களிலேயே சமூக வலைதளங்களில் வைரலாகி ரசிகர்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர்.

புரோமோவில் ரஜினியின் ஸ்டைல் மற்றும் கமல்ஹாசனின் நகைச்சுவை பாணி ரசிகர்களை கவர்ந்துள்ளது. இதன் மூலம் திரைப்படம் பெரும் அளவில் தயாராகி, வணிக ரீதியிலும் ரசிகர் ரீதியிலும் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தின் முக்கிய நடிகர், நடிகைகள், கதைக்களம் உள்ளிட்ட விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என தயாரிப்புக் குழு தெரிவித்துள்ளது.

இந்த மாபெரும் திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் வரவிருக்கும் 2027 ஆம் ஆண்டில் தொடங்க உள்ளன. “ரஜினி–கமல் ஒரே திரையில்” என்ற வாக்கியம் ரசிகர்களுக்கு ஏற்கனவே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், புரோமோ வெளியீடு அந்த எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்துள்ளது.

சினிமா உலகம் முழுவதும் இப்போது ஒரே கேள்வி — “யார் ஹீரோ?”