“ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பம்” – பெருநகர சென்னை மாநகராட்சி அறிவிப்பு

விளம்பரப் பலகைகள் அமைப்பதற்கான அனுமதி மற்றும் விதிமீறல்கள் தொடர்பாக பெருநகர சென்னை மாநகராட்சி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இனி விளம்பரப் பலகைகள் அமைக்க விரும்பும் அனைவரும் கட்டாயமாக ஆன்லைன் வழியே விண்ணப்பிக்க வேண்டும் என்றும், ஏற்கனவே உரிமம் பெற்று நிறுவப்பட்ட பலகைகளில் உள்ள விதிமீறல்களை 06.03.2026க்குள் சரிசெய்ய வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் விதிகள், 2023ன் கீழ் விளம்பரப் பலகைகள் அமைப்பதற்கான வழிமுறைகள், அரசாணை எண் 45 (நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, 12.04.2023) மூலம் வெளியிடப்பட்டுள்ளன. அந்த விதிமுறைகளின்படி, விளம்பரப் பலகை அமைக்க விரும்புவோர் மாநகராட்சி ஆணையரிடம் https://erp.chennaicorporation.gov.in/portal/login.jsp என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும்.

இந்த விண்ணப்பங்கள் ‘ஒற்றைச் சாளரக் குழு’ மூலம் பரிசீலிக்கப்பட்டு, அனைத்து விதிமுறைகளும் பூர்த்தி செய்யப்பட்டு உரிய கட்டணம் செலுத்தப்பட்ட பின் மட்டுமே உரிமம் வழங்கப்படும். இதன் மூலம் நகரத்தில் ஒழுங்கற்ற விளம்பரப் பலகைகள் கட்டுப்படுத்தப்படுவதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

முக்கிய விதிமுறைகள்:

  1. விளம்பரப் பலகைகள் நிலையான வடிவில் அமைக்கப்பட வேண்டும். நெகிழ்வு காகிதம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட பிற பொருட்களில் அச்சிடப்பட்டிருக்க வேண்டும்.

  2. டிஜிட்டல் திரைகள் சுழற்சி முறையில் காண்பிக்கப்படுமானால், ஒவ்வொரு காட்சியும் குறைந்தது 10 விநாடிகள் வரை மட்டுமே இருக்க வேண்டும்.

  3. அனிமேஷன் அல்லது முழுமையான வீடியோ காட்சிகள் வாகன போக்குவரத்து இல்லாத இடங்கள் அல்லது வாகன நிறுத்துமிடங்களில் மட்டுமே அனுமதிக்கப்படும்.

  4. நகராட்சி மற்றும் மாநில/மத்திய சாலைகளின் எல்லைகளில் குறிப்பிடப்பட்ட இடங்களைத் தவிர பிற பகுதிகளில் பலகை அமைக்க ஆணையரின் தனிப்பட்ட அனுமதி அவசியம்.

  5. தரைமட்டத்திலிருந்து விளம்பரப் பலகையின் அதிகபட்ச உயரம் 10 மீட்டரை மீறக்கூடாது. மேலும், இத்தகைய பலகைகள் இரண்டாம் மாடி உயரம் வரை மட்டுமே அனுமதிக்கப்படும்.

அனைத்து விளம்பரப் பலகைகளும் உரிமம் பெற்றிருக்க வேண்டும். உரிமம் இன்றி அமைக்கப்பட்ட பலகைகள் அனுமதியற்றதாகக் கருதப்பட்டு உடனடியாக அகற்றப்படும். மேலும், உரிமம் பெற்ற பின்னரும் விதிமுறைகளை மீறி அமைக்கப்பட்ட பலகைகளுக்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.

அனுமதியற்ற விளம்பரப் பலகைகளுக்கு ரூ.25,000 அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 06.03.2026 வரை விண்ணப்பிக்கவும், விதிமீறல்களை சரிசெய்யவும் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

07.03.2026 முதல் உரிய உரிமம் இல்லாத அனைத்து விளம்பரப் பலகைகளும் அங்கீகரிக்கப்படாததாகக் கருதப்பட்டு அகற்றப்படும். அகற்றுதல் தொடர்பான செலவுகள் கட்டட உரிமையாளர்கள் அல்லது பலகை அமைத்தவர்களிடமிருந்து வசூலிக்கப்படும் என்றும் மாநகராட்சி எச்சரித்துள்ளது.

இந்த நடவடிக்கை நகரத்தின் அழகை பாதுகாப்பதற்கும், போக்குவரத்து பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே, விளம்பரதாரர்கள் மற்றும் கட்டட உரிமையாளர்கள் உடனடியாக விதிமுறைகளை பின்பற்றி ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.