சென்னை:

தமிழகத்தில் நடைபெற உள்ள 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் தொகுதி பங்கீடு மற்றும் தேர்தல் அறிக்கை தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை விரைவாக முடிக்க தி.மு.க. தலைவர் மற்றும் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கட்சித் தலைமையினருக்கு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் மொத்தம் 13 கட்சிகள் இடம்பெற்றிருந்தன. அந்த தேர்தலில் தி.மு.க. 173 தொகுதிகளில் போட்டியிட்டது. அதேபோல் காங்கிரஸ் 25, ம.தி.மு.க. 6, இந்திய கம்யூனிஸ்ட் 6, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 6, விடுதலை சிறுத்தைகள் கட்சி 6, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 3, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி 3, மனிதநேய மக்கள் கட்சி 2, அகில இந்திய பார்வர்டு பிளாக் 1, தமிழக வாழ்வுரிமை கட்சி 1, மக்கள் விடுதலை கட்சி 1 மற்றும் ஆதிதமிழர் பேரவை 1 தொகுதிகளில் போட்டியிட்டன.

இந்த கூட்டணியில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளைத் தவிர மற்ற கூட்டணி கட்சிகள் தி.மு.க.வின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.

வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தி.மு.க. கூட்டணியில் இடம்பெறும் கட்சிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தற்போது இந்த கூட்டணியில் மொத்தம் 26 கட்சிகள் இடம்பெற்றுள்ளன. கடந்த தேர்தலை ஒப்பிடும்போது இது இருமடங்கு அதிகமானதாகும். இருப்பினும், இதுவரை காங்கிரஸ் (28 தொகுதிகள்), இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (2 தொகுதிகள்) மற்றும் மனிதநேய மக்கள் கட்சி (2 தொகுதிகள்) ஆகியவற்றுடன் மட்டுமே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மற்ற கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அண்ணா அறிவாலயத்தில் அதிகாரப்பூர்வமாக இந்த பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதுடன், கூட்டணி கட்சித் தலைவர்களுடன் தொலைபேசி மூலமாகவும் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் தேமுதிகக்கு 8 தொகுதிகள், ம.தி.மு.க.க்கு 6 தொகுதிகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள் வழங்குவது குறித்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே சமயம், ம.தி.மு.க. தனிச்சின்னத்தில் போட்டியிட முடிவு செய்தால் அதன் தொகுதி எண்ணிக்கை குறைக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. மேலும் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் தலா ஒரு தொகுதி குறைக்கலாமா என்பது குறித்தும் தி.மு.க. தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மற்றும் மக்கள் நீதி மய்யம் ஆகியவற்றுக்கு தலா 2 தொகுதிகள் வழங்கப்படலாம் என்றும், மனிதநேய ஜனநாயக கட்சி, முக்குலத்தோர் புலிப்படை, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை, எஸ்.டி.பி.ஐ. மற்றும் ஆதிதமிழர் பேரவை ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

இந்த சூழ்நிலையில், தொகுதி பங்கீடு மற்றும் தொகுதிகளை அடையாளம் காணும் பணிகளை இந்த வார இறுதிக்குள் முடிக்க வேண்டும் என்று டி.ஆர். பாலு தலைமையிலான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை குழுவிற்கு மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் வரும் ஞாயிற்றுக்கிழமைக்குள் தி.மு.க. கூட்டணியின் தொகுதி பங்கீட்டு விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் வாய்ப்பு இருப்பதாக அண்ணா அறிவாலய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அதேபோல் தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிப்பு பணிகளும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த குழுவை கனிமொழி எம்.பி. தலைமையில் அமைத்து பல்வேறு தரப்பினரிடமிருந்து கருத்துகளை பெற்று தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் 500-க்கும் மேற்பட்ட அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கடந்த தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டும் முழுமையாக நிறைவேற்றப்படாத சுமார் 150 அறிவிப்புகளும் இந்த முறை மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது தேர்தல் அறிக்கையின் அச்சிடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அடுத்த வாரம் 18ஆம் தேதிக்குப் பிறகு எந்த நேரத்திலும் தி.மு.க. தேர்தல் அறிக்கை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என அண்ணா அறிவாலய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.