புதுடெல்லி,

நீண்ட காலமாக தீவிர நோயால் பாதிக்கப்பட்ட இளைஞருக்கு கருணைக்கொலை செய்ய அனுமதி வழங்கிய சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு நாடு முழுவதும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த வழக்கில் தீர்ப்பை வழங்கிய நீதிபதி உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்ட சம்பவமும் பலரது மனதை நெகிழச்செய்துள்ளது.

இந்த வழக்கு டெல்லியைச் சேர்ந்த ஹரிஷ் ராணா என்ற இளைஞரைச் சுற்றியே நடைபெற்றது. நீண்ட காலமாக கடுமையான உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் எந்த முன்னேற்றமும் இல்லாத நிலையில் வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. மருத்துவர்கள் பலமுறை பரிசோதனை செய்த பின்னரும் அவரின் உடல்நிலையில் மாற்றம் ஏற்படும் வாய்ப்பு இல்லை என்று தெரிவித்திருந்தனர்.

இதனால் ஹரிஷ் ராணாவின் பெற்றோர் கடும் மனவேதனையில் இருந்தனர். தங்களது மகன் தொடர்ந்து துன்பத்தில் வாழ்வதை விட அவருக்கு கருணை மரணம் வழங்க வேண்டும் என அவர்கள் முடிவு செய்தனர். அதன்படி மகனின் உடல்நிலையை முழுமையாக பரிசோதிக்க அனுமதி அளிக்கவும், அவருக்கு கருணைக்கொலை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கவும் கோரி டெல்லி ஐகோர்ட்டை அணுகினர்.

ஆனால் ஹரிஷ் ராணா வெளிப்புற மருத்துவ கருவிகள் இல்லாமலேயே உயிருடன் இருப்பதை சுட்டிக்காட்டிய டெல்லி ஐகோர்ட்டு, அவரது பெற்றோர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து ஹரிஷின் பெற்றோர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர்.

முதற்கட்டமாக சுப்ரீம் கோர்ட்டும் அவர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்தது. இருப்பினும் தேவையான சூழ்நிலையில் மீண்டும் நீதிமன்றத்தை அணுகலாம் என பெற்றோருக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஹரிஷ் ராணாவின் பெற்றோர் மீண்டும் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்து கருணை மரணத்திற்கு அனுமதி கோரினர்.

இந்த மனுவை நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் கே.வி. விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு விரிவாக விசாரித்தது. விசாரணையின் போது ஹரிஷ் ராணாவின் உடல்நிலை குறித்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் வழங்கிய அறிக்கையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

அந்த அறிக்கையின் படி ஹரிஷ் ராணா மீண்டும் குணமடையும் வாய்ப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டதாக கூறப்பட்டது. அவர் தூங்குவது, எழுவது போன்ற செயல்கள் மட்டும் நடைபெறுகின்றன. ஆனால் யாருடனும் பேச முடியாத நிலை இருந்தது. தனது அன்றாட தேவைகளுக்குக் கூட முழுமையாக பிறரை சார்ந்து வாழ்ந்து வந்தார். அவரது உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்த அறிக்கையை கருத்தில் கொண்டு நீதிபதிகள் முக்கியமான தீர்ப்பை வழங்கினர். அதன்படி ஹரிஷ் ராணாவுக்கு வழங்கப்பட்டு வந்த செயற்கை உணவு மற்றும் நீர் போன்ற வாழ்வாதார உதவிகளை நிறுத்த அனுமதி வழங்கப்பட்டது. இந்த நடவடிக்கை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவக் குழுவின் கண்காணிப்பில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த தீர்ப்பை அறிவிக்கும் போது நீதிபதி ஜே.பி. பர்திவாலா மிகவும் உணர்ச்சிவசப்பட்டதாக கூறப்படுகிறது. தீர்ப்பை வழங்கிய பிறகு அவர் தனது இருக்கையில் இருந்து எழுந்து சென்று சிறிது நேரம் கண்ணீர் விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் நீதிமன்றத்தில் இருந்தவர்களை மட்டுமின்றி, இந்த செய்தியை அறிந்த பலரையும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.

இந்த தீர்ப்பு இந்தியாவில் கருணைக்கொலை தொடர்பான விவாதங்களை மீண்டும் எழுப்பியுள்ளதுடன், மனிதாபிமானம் மற்றும் மருத்துவ நெறிமுறைகள் குறித்த கேள்விகளையும் முன்வைத்துள்ளது.