சென்னை,
தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அரசியல் சூழல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி இந்த தேர்தலில் பல கட்சிகள் களம் காணுவதால் நான்கு முனைப்போட்டி நிலவி வருகிறது. அனைத்து முக்கிய அரசியல் கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தைகளை நிறைவு செய்து, போட்டியிடும் தொகுதிகளைத் தீர்மானித்து தேர்தல் பணிகளில் முழுமையாக ஈடுபட்டு வருகின்றன.

இதனுடன், வேட்பு மனு தாக்கல் செயல்முறையும் இன்று தொடங்கியுள்ளது. தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களிடமிருந்து மனுக்கள் பெற தேர்தல் அதிகாரிகள் தயார் நிலையில் உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இன்று தொடங்கிய இந்த செயல்முறை ஏப்ரல் 6ஆம் தேதி வரை நடைபெறும். அன்றைய தினம் மதியம் 3 மணி வரைவே வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வேட்பு மனு தாக்கல் தொடங்கியுள்ள நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது வேட்பாளர்களுக்கு ஆதரவாக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் ஏற்கனவே தங்களது தேர்தல் பிரசாரத்தை ஆரம்பித்துள்ளனர். முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை தனது பிரசாரத்தை தொடங்க உள்ளார். தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயும் இன்று தனது பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார்.
இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியும் வலுவாக களம் காண்கிறது. அதன் ஒரு பகுதியாக, சென்னை மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக பிரதமர் நரேந்திர மோடி வரும் 4ஆம் தேதி பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். அவர் அன்றைய தினம் ரோடு ஷோ நடத்தி மக்களிடம் நேரடியாக வாக்கு சேகரிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, கன்னியாகுமரி மற்றும் கோவை உள்ளிட்ட பகுதிகளிலும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரதமர் மோடி பிரசாரம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். இதனால் அந்த பகுதிகளில் தேர்தல் சூழல் மேலும் பரபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மொத்தத்தில், வேட்பு மனு தாக்கல் தொடக்கம், தலைவர்கள் பிரசாரம், முக்கிய தலைவர்களின் வருகை உள்ளிட்ட காரணங்களால் தமிழக அரசியல் களம் முழுவதும் சூடுபிடித்துள்ளது. வரவிருக்கும் தேர்தல் மாநிலத்தின் அரசியல் திசையை தீர்மானிக்கும் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.