“11-க்கும் மேற்பட்ட திமுக அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு” – தமிழிசை சவுந்தரராஜன்

சென்னை: திமுகவால் வளர்ச்சியைச் சொந்தம் கொண்டாட முடியாது; 11-க்கும் மேற்பட்ட திமுக அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன என தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

மயிலாப்பூர் சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிடும் தமிழிசை, செய்தி நிறுவனத்திற்கு அளித்தப் பேட்டியில் திமுகவினர் எப்போதும் பொய் பேசுவதாக விமர்சித்தார். மக்களிடம் நேரடியாகச் சென்று கேட்டால், கடந்த 5 ஆண்டுகளில் எம்எல்ஏ-க்கள் என்ன செய்தனர் எனத் தெரியும் என்றார்.

மயிலாப்பூர் தொகுதியில் பின்தங்கிய நிலை நிலவுவதாகவும், சென்னை மையப்பகுதியில் இத்தகைய நிலை கற்பனைக்கு அப்பாற்பட்டது எனவும் கூறினார். தமிழகத்தின் அனைத்துத் தொகுதிகளிலும் இதே நிலைதான் உள்ளது; திமுகவால் வளர்ச்சி சாத்தியமில்லை என சாடினார்.

11-க்கும் மேற்பட்ட திமுக அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளதாகவும், இத்தகைய முறைகேடுகள் நிறுத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார். தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைய வேண்டும்; மயிலாப்பூரில் மாற்றமும், புதிய சட்டப்பேரவை உறுப்பினரும் தேவை என்றார்.

தமிழிசை, மயிலாப்பூர் மக்களின் சகோதரியாக செயல்படுவேன் என உறுதியளித்தார். மக்கள் எதிர்கொள்ளும் அனைத்துப் பிரச்சினைகளையும் சரிசெய்வேன்; தமிழகத்தில் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறுவோம் எனத் தெரிவித்தார்.

மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை அவசரகதியில் செயல்படுத்துவதாக எதிர்க்கட்சிகள் கூறுவதை வன்மையாகக் கண்டித்தார். தேர்தல் பிரச்சாரம் மிகச் சிறப்பாக நடைபெறுகிறது; மக்கள் ஆர்வத்துடன் ஏற்றுக்கொள்கின்றனர்; மயிலாப்பூரில் தாமரை நிச்சயம் மலரும் என உறுதியளித்தார்.