பேராவூரணி தொகுதிக்கு பெருமை சேர்ப்பவர் யார்?
தஞ்சாவூர் மாவட்டத்தின் கடைமடைப் பகுதியான பேராவூரணியில் தென்னை விவசாயமும் மீன்பிடித் தொழிலும் முதன்மையானவை. மீனவர்கள், முஸ்லிம்கள், முத்தரையர்கள், முக்குலத்தோர், பட்டியலினத்தவர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர்.

இத்தொகுதியில் அதிமுக 5 முறை, காங்கிரஸ், தமாகா தலா 2 முறை, திமுக, தேமுதிக, சுயேச்சை தலா ஒரு முறை வெற்றி பெற்றுள்ளன. 2021 தேர்தலில் திமுகவின் நா.அசோக்குமார் 89,130 வாக்குகளுடன் வென்றார். அதிமுக எஸ்.வி.திருஞானசம்பந்தம் 65,627 வாக்குகளுடன் இரண்டாம் இடம் பெற்றார்.
தற்போதைய போட்டி
திமுக சார்பில் தற்போதைய எம்எல்ஏ நா.அசோக்குமார் மீண்டும் போட்டியிடுகிறார். அதிமுகவில் மா.கோவிந்தராஜ் மகன் கோவி.இளங்கோ, நாதக எம்.புவனா, தவெக சந்திரகாண்டீபன் களமிறங்கியுள்ளனர்.
அசோக்குமார் 5 ஆண்டுகால வளர்ச்சித் திட்டங்கள், அரசு நலவாக்குகளை முன்னிறுத்தி வாக்குச் சேகரிக்கிறார். மக்களிடம் வரவேற்பு உள்ளதாகவும், வெற்றி உறுதி என நம்புகிறார்.
அதிமுக இளங்கோ, திமுக வாக்குறுதிகள் நிறைவேறாததை விமர்சித்து, எதிர்காலத் திட்டங்களை விளம்பரப்படுத்துகிறார். 2024 மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி வாக்குகள் அதிகம் என வெற்றி நம்பிக்கையில் உள்ளார்.
மக்கள் எதிர்பார்ப்புகள்
மல்லிப்பட்டினம் துறைமுகத்தில் தூண்டில்வளைவு, குளிர்பதனக்கிடங்கு, புதுப்பட்டினம் கடற்கரை வசதிகள், மனோரா நினைவுச்சின்ன விடுதிகள், கடற்கரைக் கிராம சாலைகள், குடிநீர், தென்னை வளர்ச்சி அலுவலகம், நான்குவழிச் சாலை ஆகியவை முக்கிய கோரிக்கைகள்.
வாக்காளர் விவரம்
ஆண்கள் 1,04,268, பெண்கள் 1,08,543, மூன்றாம்பாலினம் 15, மொத்தம் 2,12,826 வாக்காளர்கள்.
திமுக-அதிமுக இடையேயே கடும் போட்டி நிலவுகிறது. வெற்றி யாருக்கு என்பது மே 4 அன்று தெரியும்.