வேளச்சேரி தொகுதியில் வெற்றிக்காக தீவிரமாகச் சுற்றிவரும் வேட்பாளர்கள்

தென்சென்னையில் அதிவேகமாக வளர்ந்து வரும் முக்கிய சட்டமன்றப் பகுதியே வேளச்சேரி தொகுதி. இந்த தொகுதியில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், அதிமுக, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக்கழகம் உள்ளிட்ட பல கட்சிகள், மேலும் சுயேச்சைகள் என மொத்தம் 27 பேர் இத்தேர்தலில் களத்தில் உள்ளனர்.

காங்கிரஸ் – ஹசன் மவுலானா

வேளச்சேரி தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினரான ஹசன் மவுலானா, இந்த முறை மீண்டும் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார். திமுக அரசு கடந்த ஐந்து ஆண்டுகளில் மேற்கொண்ட பல்வேறு வளர்ச்சி பணிகள் மற்றும் நலத்திட்டங்களை மக்களிடம் எடுத்துக்கூறி, வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

வேளச்சேரி பகுதியில் தற்போது உள்ள சுமார் ஐம்பது ஆண்டுகள் பழமையான கழிவுநீர் வடிகால்கள் காரணமாக மழைக்காலங்களில் நீர்நிலைத்தல், துர்நாற்றம் போன்ற பிரச்சினைகள் அதிகம் இருப்பதாக மக்கள் குற்றம்சாட்டி வந்தனர். இதனைத் தீர்க்க, புதிய கழிவுநீர் வடிகால் அமைக்கும் பணி தொடங்கப்படும் என அவர் தனது பிரச்சாரங்களில் வாக்குறுதி அளித்து வருகிறார்.

களநிலை மற்றும் வாக்காளர்கள் எதிர்பார்ப்பு

அதிவேகமாக குடியிருப்புகள், வணிக வளாகங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிகரித்து வரும் வேளச்சேரியில், அடிப்படை வசதிகள் சீரமைப்பு, போக்குவரத்து நெரிசல் குறைப்பு, நீர்ப்பாசன – வடிகால் வசதி மேம்பாடு ஆகியவை வாக்காளர்களின் முக்கியக் கோரிக்கைகளாக இருக்கின்றன. இதை மையமாகக் கொண்டு ஒவ்வொரு வேட்பாளரும் தங்கள் தேர்தல் பிரசாரத்தில் பல வாக்குறுதிகளை முன்வைத்து, மக்கள் மனதை கவர முயற்சி செய்கிறார்கள்.

அதே சமயம், கடந்த ஐந்து ஆண்டுகளில் நடந்த வளர்ச்சி பணிகளை முன்னிறுத்தி மீண்டும் வெற்றி பெறுவேன் என ஹசன் மவுலானா நம்பிக்கை தெரிவித்து வருகிறார். திமுக–காங்கிரஸ் கூட்டணியும், அதிமுக முகாமும், புதிய கட்சிகளும் கடும் போட்டியில் இறங்கியுள்ள நிலையில், வேளச்சேரி தொகுதியில் யார் வெற்றி கோப்பையை உயர்த்தப் போகிறார்கள் என்பதுதான் கவனம் ஈர்த்துள்ளது.