கிருஷ்ணகிரி சட்டமன்றத் தொகுதி தமிழகத்தின் 53‑வது இடத்தில் உள்ளது. காஷ்மீர்–கன்னியாகுமரி நீண்ட தேசிய நெடுஞ்சாலை இத்தொகுதி வழியே செல்கிறது என்பதுடன், நான்கு தேசிய நெடுஞ்சாலைகள் சந்திக்கும் இடமாகவும் கிருஷ்ணகிரி நகரம் விளங்குகிறது. இது வாணிபம், வியாபாரம், போக்குவரத்து என அனைத்து துறைகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த தொகுதியாக உள்ளது.

இந்தத் தொகுதி வரலாற்று சிறப்புமிக்கது. ‘பாராமகால்’ என்றழைக்கப்படும் 12 கோட்டைத் தலங்களில் முக்கியமான கிருஷ்ணகிரி மலைக்கோட்டை, தொகுதியின் அடையாளமாக உயர்ந்து நிற்கிறது. தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள கிருஷ்ணகிரி அணை மூலம் இரண்டாம் போக நெல் சாகுபடி மட்டுமன்றி, மல்லிகை, மா, தென்னை போன்ற பயிர்சாகுபடியிலும் விவசாயிகள் நன்றாக ஈடுபட்டு வருகின்றனர்.

இங்கு தமிழ், தெலுங்கு, கன்னடம், உருது ஆகிய மொழிகளை பேசும் மக்கள் கலந்து வாழ்கின்றனர். கிருஷ்ணகிரி நகராட்சி, காவேரிப்பட்டணம் பேரூராட்சி, கிருஷ்ணகிரி மற்றும் காவேரிப்பட்டணம் ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 40 ஊராட்சிகள் இத்தொகுதிக்கு உட்பட்டுள்ளன. வன்னியர், வெள்ளாள கவுண்டர், பட்டியலின மக்கள் அதிகளவு இருப்பதோடு, இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ சமூகத்தினரும் பரவலாக வாழ்கின்றனர்.

இந்தத் தொகுதியில் இன்றும் அடிப்படை வசதிகள் பெரும்பாலும் பின்தங்கியே உள்ளன. பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதில் பிரச்சினை, பொதுக் கழிப்பறை வசதிகள் போதுமான அளவு இல்லாமை போன்றவை மக்களின் முதன்மைக் கோரிக்கைகள். நகரில் காய்கறி சந்தைக்கு தனியான இடம் ஏற்படுத்த வேண்டும் என்றும், கிருஷ்ணகிரியில் அரசு சட்டக்கல்லூரி ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்றும் மக்கள் நீண்டகாலமாக அழைக்கின்றனர். காவேரிப்பட்டணத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் ஒரு முழுமையான மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட வேண்டும் என்பதும் மக்களின் கோரிக்கை. தென்பெண்ணை ஆற்றில் கழிவுநீர் கலக்காமல், சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு, எண்ணேகொல்புதூர் கால்வாய் திட்டம் விரைவாக முடிக்கப்பட வேண்டும் என்பதும் எதிர்பார்ப்புகளில் அடங்குகிறது.

விவசாயிகள் நீண்டகாலமாக மா ஏற்றுமதி மண்டலம் அமைக்கப்பட வேண்டும் என கேட்டு வருகின்றனர். கிருஷ்ணகிரியில் புளி ஏல மையம், புளி குளிர்பதன கிடங்கு, தக்காளி, மாம்பழக் கூழ் தொழிற்சாலை, வாசனைத் திரவிய தொழிற்சாலை போன்ற அமைப்புகள் உருவாக வேண்டும் என்பது அவர்களின் நீண்டகால நோக்கம். சுற்றுலாத் துறையை மேம்படுத்த கிருஷ்ணகிரி சின்ன ஏரியில் பூங்கா, படகு இல்லம், அவதானப்பட்டி சிறுவர் பூங்காவில் தீம் பார்க், அணையில் படகு இல்லம், அணை பூங்கா போன்ற வசதிகள் உருவாக வேண்டும் என்பது சுற்றுலா ஆர்வலர்களின் கோரிக்கை.

சாலை வசதிகள் தொடர்பாக கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி இடமாற்றம் செய்யப்பட வேண்டும், ஆவின் மேம்பாலத்தில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக ஈரடுக்கு மேம்பாலம் அமைக்கப்பட வேண்டும், கிருஷ்ணகிரி வழியாக ஓசூருக்கு ரயில் வழித்தடம் அமைக்கப்பட வேண்டும் என்பன நீண்டகால தீராத பிரச்சினைகள்.

இத்தொகுதி 16 தேர்தல்களை சந்தித்துள்ளது. 1951‑ல் சுயேச்சை வேட்பாளர் கிருஷ்ணமூர்த்தி வெற்றி பெற்றார். அதன்பின் அதிமுக 7 முறை, திமுக 6 முறை, காங்கிரஸ் 2 முறை வெற்றி பெற்றுள்ளன. இம்முறை திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் முன்னாள் எம்.பி. செல்லக்குமார், அதிமுக சார்பில் சிட்டிங் எம்.எல்.ஏ. அசோக்குமார், நாம் தமிழர் கட்சி சார்பில் சுகந்தி பார்த்திபன், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் முகுந்த் பாண்டியன் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.

காங்கிரஸ் வேட்பாளர் செல்லக்குமார் ஏற்கெனவே முன்னாள் எம்.பி.யாக இருந்து மக்களிடம் நன்கு பரிச்சயமாக உள்ளவர். உட்கட்சியில் வெளியூர்காரர் என்ற அதிருப்தி இருந்தாலும், திமுக நிர்வாகிகளுடன் இணைந்து களப்பணியில் ஈடுபட்டு வருகிறார். முன்பு செய்த திட்டங்கள், திமுக ஆட்சியில் மேற்கொண்ட திட்டங்கள் ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அதிமுக வேட்பாளர் அசோக்குமார், சிட்டிங் எம்.எல்.ஏ.யாக இருப்பதோடு, மாவட்டச் செயலாளராகவும் செயல்பட்டு உள்ளூர் வலுவான தொடர்புகள் கொண்டவர். 2021 தேர்தலில் உடல்நல பாதிப்பினால் முழுமையாக களப்பணி செய்ய முடியாவிட்டாலும், கட்சி பிரச்சாரத்தால் வெற்றி பெற்றார். இம்முறையும் தொகுதியில் செய்த திட்டங்களை விளக்கி தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.