பாரதியாரின் சொந்த ஊரான எட்டயபுரத்தில் தேர்தல் புறக்கணிப்பு.. 2 கிராம மக்கள் அதிரடி முடிவு

தமிழக சட்டசபை தேர்தல் இன்று மாநிலம் முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில், தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள இரண்டு கிராமங்களில் தேர்தல் புறக்கணிப்பு சம்பவம் கவனம் ஈர்த்துள்ளது. கவிஞர் சுப்பிரமணிய பாரதியாரின் சொந்த ஊரான எட்டயபுரம் பகுதியில் உள்ள விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குளத்துவாய்ப்பட்டி மற்றும் குமரகிரி கிராம மக்கள் வாக்குப்பதிவை புறக்கணித்தனர்.

வழிப்பாதை தகராறு காரணமாக பல ஆண்டுகளாக நிலவி வரும் பிரச்சினைக்கு இதுவரை தீர்வு காணப்படாததால், தேர்தலை புறக்கணிக்க கிராம மக்கள் முடிவு செய்ததாக கூறப்படுகிறது. இலங்கை அகதிகள் முகாமை கடந்து விவசாய நிலங்களுக்கு செல்லும் பாதையை பயன்படுத்துவது தொடர்பாக கிராம மக்களுக்கும் முகாமில் வசிப்பவர்களுக்கும் இடையே நீண்டகாலமாக மோதல் நிலவி வந்துள்ளது. கடந்த 18ஆம் தேதி நடந்த கல்வீச்சு தாக்குதலில் சிலர் காயமடைந்ததால் நிலைமை மேலும் பதற்றமடைந்தது.

இதனால், அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து நிரந்தர தீர்வு காணும் வரை தேர்தலில் பங்கேற்க மாட்டோம் என்று கிராம மக்கள் அறிவித்தனர். இதன் காரணமாக 64ஆம் எண் வாக்குச்சாவடியில் பதிவு செய்யப்பட்ட 983 வாக்காளர்களில் நண்பகல் வரை வெறும் 5 வாக்குகள் மட்டுமே பதிவாகியிருந்தது அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் பல இடங்களில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்த நிலையில், எட்டயபுரம் பகுதியில் நடந்த இந்த தேர்தல் புறக்கணிப்பு சம்பவம் அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது.