ஓட்டுப்பதிவு வீடியோ வெளியிட்ட தவெக ஆதரவாளர் கைது.. தேர்தல் விதிமுறை மீறல் நடவடிக்கை
தமிழக சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், திருப்பத்தூரில் ஓட்டுப்பதிவு செய்ததை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்ட தவெக ஆதரவாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் ஆணையம் ஏற்கனவே வாக்குச்சாவடிக்குள் மொபைல் போன் பயன்படுத்துதல், ஓட்டு பதிவு செய்யும் காட்சிகளை படம் எடுத்து பகிர்வு செய்தல் ஆகியவை சட்டப்படி குற்றம் என்றும் எச்சரித்திருந்தது.
இந்நிலையில், திருப்பத்தூரை சேர்ந்த சக்திவேல் என்பவர் தாம் யாருக்கு வாக்களித்தார் என்பதை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். வாக்குப்பதிவு ரகசியத்தை பாதுகாப்பது தேர்தல் நடைமுறையின் முக்கிய அம்சமாக கருதப்படுகிறது. அதனை மீறும் நபர்களுக்கு சிறைத்தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுபோன்ற செயல்கள் ஜனநாயக நடைமுறைக்கு எதிரானவை என்பதால் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் பலரும் தாங்கள் ஓட்டு போட்ட வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.