போலீசாரால் தேடப்பட்டு வரும் நித்யானந்தா, ‘கைலாசா’ என்ற நாட்டில் தலைமறைவாக வாழ்ந்து வருவது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில், அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் வெளியிட்டுள்ள புதிய பதிவு ஒன்று தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நித்யானந்தாவின் பதிவு கடந்த 16-ம் தேதி நித்யானந்தா தனது சமூக வலைதளத்தில் ஒரு பதிவை வெளியிட்டார். அதில், கைலாசா நாட்டுப் பிரதிநிதிகள் சென்னை தலைமைச் செயலகத்திற்குச் சென்று, தமிழக அமைச்சர்களான லோகேஷ், ஸ்ரீநாத் மற்றும் வன்னி அரசு ஆகியோரைச் சந்தித்ததாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்தச் சந்திப்பில் இரு நாடுகளுக்கு இடையிலான ராஜாங்க ரீதியிலான உறவுகள் குறித்துப் பேசியதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
தன்னுடைய இந்தத் தகவல் உண்மையானது என்பதை உறுதிப்படுத்த, அமைச்சர்களுடன் கைலாசா நாட்டு நிர்வாகிகள் அமர்ந்து பேசுவது போன்ற புகைப்படங்களையும் அவர் வெளியிட்டுள்ளார். மேலும், “சுவாமி நித்யானந்தா எழுதிய ‘யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆப் கைலாசா’ மற்றும் ‘கைலாசாவின் வரலாறு’ ஆகிய புத்தகங்களை அமைச்சர்களுக்குப் பரிசாக அளித்தோம். இந்த புத்தகங்கள் சனாதன தர்மத்தின் மீட்சி மற்றும் அதைப் பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்துகின்றன” என்றும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
தலைமைச் செயலகத்தின் விளக்கம் நித்யானந்தாவின் இந்தப் பதிவு தமிழக அரசியல் களத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியது. இது குறித்து தலைமைச் செயலக வட்டாரங்களில் விசாரித்தபோது, நித்யானந்தா கூறிய தகவலை அதிகாரிகள் திட்டவட்டமாக மறுத்தனர்.
இது குறித்துப் பேசிய அரசு தரப்பினர், “நித்யானந்தா குறிப்பிடுவதைப் போல எந்தவொரு அரசாங்க ரீதியான சந்திப்பும் நடைபெறவில்லை. அமைச்சர்களைச் சந்திக்க தினமும் பல பொதுமக்கள் மனுக்கள் கொடுக்க வருவது வழக்கம். அதுபோல வந்த நபர்கள், தாங்கள் கொண்டு வந்த புத்தகத்தை அமைச்சர்களிடம் கொடுத்து புகைப்படம் எடுத்துக்கொண்டார்களே தவிர, அரசு ரீதியாக எந்தப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை. நித்யானந்தா வெளியிட்டுள்ள தகவல்கள் முற்றிலும் தவறானவை” என்று விளக்கம் அளித்துள்ளனர்.
கடந்த மே மாதம் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தவெக வெற்றி பெற்றபோது, அக்கட்சியின் தலைவரும் நடிகருமான விஜய்க்கு நித்யானந்தா வாழ்த்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது, இந்தச் சந்திப்பு குறித்த சர்ச்சை, தமிழக அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது.