நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் மற்றும் கல்வித் துறையில் நிலவும் ஊழல்களுக்கு எதிராக டெல்லியில் ஜனநாயக முறைப்படி போராட்டம் நடத்தி வந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் மற்றும் அபிஜித் திப்கே ஆகியோரைக் காவல்துறை கைது செய்துள்ள சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அடக்குமுறை நடவடிக்கைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஐ-எம்) மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நீட் வினாத்தாள் கசிவு ஊழலுக்குக் காரணமான கல்வி மாஃபியாக்கள் மீது நடவடிக்கை எடுக்க முதுகெலும்பு இல்லாத மோடி அரசு, அதற்கு எதிராக ஜனநாயக ரீதியாகப் போராடிய சோனம் வாங்சுக் உள்ளிட்டோரை கைது செய்துள்ளது. நியாயமான எதிர்ப்புக் குரல்களை லத்திகள் மற்றும் அராஜக கைதுகள் மூலம் நசுக்கப் பார்க்கும் இந்த ஜனநாயக விரோத, சர்வாதிகாரப் போக்கை வன்மையாகக் கண்டிக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கல்வி மந்திரியின் தோல்வியை மறைப்பதற்காகப் போராடும் சமூக ஆர்வலர்கள் மீது கோழைத்தனமான அடக்குமுறையை அரசு ஏவி வருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அவர், இந்த அடக்குமுறைக்கு எதிராக நாட்டின் ஒட்டுமொத்த ஜனநாயக சக்திகளும் வீதிக்கு வந்து போராட வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.
“ஜந்தர் மந்தரிலிருந்து எழப்போகும் இந்த உழைக்கும் வர்க்க இளைஞர்களின் புரட்சிப் பேரலை, அதிகாரச் சிம்மாசனத்தின் அஸ்திவாரத்தையே உலுக்கி தகர்க்கும்” என்றும், இத்தகைய அடக்குமுறைகளுக்குத் தாங்கள் அஞ்சப்போவதில்லை என்றும் பெ. சண்முகம் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார். நீட் முறைகேடு விவகாரம் மற்றும் சமூக ஆர்வலர்கள் கைது செய்யப்பட்ட விதம், தற்போது மத்திய அரசுக்கு எதிராக வலுவான அரசியல் அழுத்தத்தை உருவாக்கியுள்ளது.