தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு.. சாதனை அளவில் ஓட்டுகள் பதிவு

தமிழ்நாட்டில் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் இன்று விறுவிறுப்பாக நடைபெற்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. காலை 7 மணி முதல் தொடங்கிய வாக்குப்பதிவில் மக்கள் அதிகாலை முதலே ஆர்வத்துடன் வரிசையில் நின்று தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றினர். மாநிலம் முழுவதும் அமைதியான சூழலில் தேர்தல் நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த தேர்தலில் கடந்த முறை விட அதிகளவில் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாலை 5 மணி நிலவரப்படி 82.24% வாக்குகள் பதிவாகியிருந்தன. இறுதி நேரத்தில் வாக்குச்சாவடிகளில் கூட்டம் அதிகரித்ததால் மொத்த வாக்குப்பதிவு சதவீதம் 90% வரை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாலை 6 மணிக்குள் வாக்குச்சாவடிக்கு வந்த அனைவருக்கும் டோக்கன் வழங்கப்பட்டு, அவர்கள் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

தமிழ்நாடு முழுவதும் 33,133 இடங்களில் 75,064 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டிருந்தன. வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைக்கும் பணி தொடங்கியுள்ளது. பதிவான வாக்குகள் மாநிலம் முழுவதும் 62 மையங்களில் பாதுகாப்பாக வைத்து பின்னர் எண்ணப்பட உள்ளன.

தமிழ்நாட்டின் அடுத்த அரசை தீர்மானிக்கும் இந்த முக்கிய தேர்தலில் மக்கள் காட்டிய உற்சாகம் ஜனநாயகத்தின் வெற்றியாக பார்க்கப்படுகிறது.