எந்த பொத்தானை அழுத்துவது என தெரியாமல் தடுமாறிய திண்டுக்கல் சீனிவாசன்.. வாக்குச்சாவடியில் பரபரப்பு
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், திண்டுக்கல்லில் அதிமுக வேட்பாளர் திண்டுக்கல் சீனிவாசன் வாக்களிக்க வந்தபோது நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. திண்டுக்கல் தொகுதி வேட்பாளரான அவர், தனது மனைவி மற்றும் மகன்களுடன் எம்விஎம் அரசினர் மகளிர் கலைக்கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த 156வது வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களிக்க முயன்றார்.
பூத் சிலிப் சரிபார்ப்பு மற்றும் விரலில் மை வைக்கும் பணிகள் முடிந்தபின், வாக்குப்பதிவு இயந்திரம் அருகே சென்ற அவர், வாக்கு பதிவு செய்ய வேண்டிய பொத்தானை அழுத்துவதற்கு பதிலாக அருகில் இருந்த சிவப்பு சிக்னல் விளக்கை அழுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் அவரது ஓட்டு பதிவாகவில்லை. பின்னர் அங்கிருந்த அதிகாரிகள், சரியான பொத்தானை அழுத்த வேண்டும் என்று கூறினர்.
இதற்கு திண்டுக்கல் சீனிவாசன் “வரலையே அம்மா” என்று கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. உடனே பெண் அதிகாரி அவரிடம், “பட்டனை நல்லா அழுத்துங்க சார்” என்று தெரிவித்தார். பின்னரும் குழப்பமடைந்த அவர், அதிகாரியை அருகே வரச் சொல்லி உதவி கேட்டார். பின்னர் அதிகாரி இயந்திரத்தை காட்டி விளக்கம் அளித்ததன் பிறகு சரியான பொத்தானை அழுத்தி வாக்களித்தார். அதன் பின்னர் பீப் சத்தம் எழுந்ததும் அவர் அங்கிருந்து வெளியேறினார்.
இந்த சம்பவம் அங்கிருந்தவர்களிடையே சிரிப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.