சென்னை: தமிழ்நாட்டில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கற்பிக்கப்பட்டு வரும் பல்வேறு வகையான துணை மருத்துவ படிப்புகளுக்கான (Paramedical Courses) புதிய கட்டண விவரங்களை தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குநரகம் (DME) அதிகாரப்பூர்வமாக நிர்ணயித்து அறிவித்துள்ளது. அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்குத் தனித்தனியாக இந்த கட்டணங்கள் பிரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன.

3 கல்வியாண்டுகளுக்குப் பொருந்தும்: தமிழகத்தில் உள்ள சுயநிதி மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பி.எஸ்சி நர்சிங், பி.பார்ம், டிப்ளமோ நர்சிங் உள்ளிட்ட துணை மருத்துவ படிப்புகளில் மாணவர் சேர்க்கையின் போது கூடுதல் கட்டணம் வசூலிப்பதைத் தடுக்கும் பொருட்டு இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ள இந்தக் கட்டண முறையானது வரும் 2026-2027, 2027-2028 மற்றும் 2028-2029 ஆகிய மூன்று அடுத்தடுத்த கல்வியாண்டுகளுக்குப் பொருந்தும் என மருத்துவக் கல்வி இயக்குநரகம் தெளிவுபடுத்தியுள்ளது.

பட்டயப் படிப்புகளுக்கான கட்டண விவரம் (Diploma Courses): வெளியிடப்பட்டுள்ள புதிய கட்டணப் பட்டியலின்படி, டிப்ளமோ சுகாதார ஆய்வாளர் மற்றும் சானிட்டரி இன்ஸ்பெக்டர் (Diploma Health Inspector / Sanitary Inspector) படிப்புகளுக்கு அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு (Government Quota) ஆண்டுக்கு 35 ஆயிரம் ரூபாயும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு (Management Quota) ஆண்டுக்கு 70 ஆயிரம் ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பொது செவிலியர் பட்டயப் படிப்பிற்கு (Diploma in General Nursing and Midwifery) அரசு ஒதுக்கீட்டில் 35 ஆயிரம் ரூபாயும், நிர்வாக ஒதுக்கீட்டில் 75 ஆயிரம் ரூபாயும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதேபோல், துணை செவிலியர் மகப்பேறு பட்டயப் படிப்பிற்கு (Diploma Auxiliary Nurse Midwifery – ANM) அரசு ஒதுக்கீட்டிற்கு 30 ஆயிரம் ரூபாயும், நிர்வாக ஒதுக்கீட்டிற்கு 60 ஆயிரம் ரூபாயும் கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், டிப்ளமோ பார்மசி (Diploma in Pharmacy) படிப்பிற்கு அரசு ஒதுக்கீட்டிற்கு 25 ஆயிரம் ரூபாயும், நிர்வாக ஒதுக்கீட்டிற்கு 50 ஆயிரம் ரூபாயும் வசூலிக்கப்பட வேண்டும்.

இளநிலை பட்டப் படிப்புகளுக்கான கட்டண விவரம் (Degree Courses): மிகவும் டிமாண்ட் உள்ள படிப்புகளான பி.எஸ்சி நர்சிங் (B.Sc Nursing) மற்றும் போஸ்ட் பேசிக் பி.எஸ்சி நர்சிங் (Post Basic B.Sc Nursing) ஆகிய படிப்புகளுக்கு அரசு ஒதுக்கீட்டு கட்டணமாக 60 ஆயிரம் ரூபாயும், நிர்வாக ஒதுக்கீட்டு கட்டணமாக 1.20 லட்சம் ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், பி.பார்ம் (B.Pharm), பி.பி.டி (BPT – Physiotherapy), பி.ஓ.டி (BOT – Occupational Therapy) மற்றும் பி.பார்ம் லேட்டரல் என்டரி (B.Pharm Lateral Entry) ஆகிய முக்கியப் படிப்புகளுக்கு அரசு ஒதுக்கீட்டில் 50 ஆயிரம் ரூபாயும், நிர்வாக ஒதுக்கீட்டில் 1 லட்சம் ரூபாயும் ஆண்டு கட்டணமாக வசூலிக்கப்பட வேண்டும். இதுமட்டுமன்றி, இளநிலை அலைடு ஹெல்த் சயின்ஸ் (B.Sc Allied Health Sciences) படிப்புகளுக்கும் இதே முறையில் அரசு ஒதுக்கீட்டிற்கு 50 ஆயிரம் ரூபாயும், நிர்வாக ஒதுக்கீட்டிற்கு 1 லட்சம் ரூபாயும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ள இந்த முறையான கட்டண அறிவிப்பு, மருத்துவக் கலந்தாய்வில் (Counselling) பங்கேற்றுத் தனியார் கல்லூரிகளைத் தேர்வு செய்யக் காத்திருக்கும் மாணவர்களுக்கும், அவர்களது பெற்றோர்களுக்கும் பெரும் நிம்மதியை அளித்துள்ளது. தனியார் கல்லூரிகள் இந்த நிர்ணயிக்கப்பட்ட தொகையை விடக் கூடுதலாகக் கட்டணம் வசூலித்தால், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் மருத்துவத் துறை வட்டாரங்கள் எச்சரித்துள்ளன.