3 நாட்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்பு வெடித்து சிதறும்: டிரம்ப் எச்சரிக்கை
வாஷிங்டன்: ஈரானின் எண்ணெய் உள்கட்டமைப்புகள் 3 நாட்களுக்குள் வெடித்து சிதறக்கூடும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமைதி ஒப்பந்தத்தை ஏற்க அழுத்தம் தரும் வகையில் அமெரிக்கா ஈரான் துறைமுகங்களை முற்றுகையிட்டுள்ளது. இதனால் மத்திய கிழக்குப் பகுதியில் பதற்றம் தொடர்கிறது.
நிருபர்களிடம் டிரம்ப் கூறியது: ஈரானில் எண்ணெய் குழாய்கள், கொள்கலன்கள், கப்பல்களில் நிரப்ப முடியாத நிலை உள்ளது. ஏதேனும் காரணத்தால் குழாய்கள் மூடப்பட்டால் வெடித்துவிடும்.
அது திடீரென வெடித்து சிதறும். 3 நாட்களுக்குள் நடக்கலாம். வெடித்தால் மீண்டும் கட்டியெழுப்ப முடியாது. சக்திவாய்ந்த விளைவுகள் ஏற்படும்.
போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைக்காக ஈரான் தலைமை என்னை அணுகலாம். பேச விரும்பினால் எங்களிடம் வரலாம், தொலைபேசி செய்யலாம். நாங்கள் பாதுகாப்பான இணைப்பு வசதிகள் கொண்டுள்ளோம்.
இந்த எச்சரிக்கை உலக எண்ணெய் சந்தையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் எண்ணெய் ஏற்றுமதி 90 சதவீதம் கார்க் தீவு வழியாக நடக்கிறது. அமெரிக்க துறைமுக முற்றுகை ஏற்கனவே பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். கச்சா எண்ணெய் விலை உயர்வு உலகப் பொருளாதாரத்தை பாதிக்கலாம்.
டிரம்ப் அமைதி விரும்புவதாகவும், ஒப்பந்தம் இல்லையெனில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.