டெல்லியில் நடைபெற்ற ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, டெல்லி கேப்பிடல்ஸ் அணியை வலுவான பந்துவீச்சால் வீழ்த்தி அபார வெற்றியை பதிவு செய்தது. அந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக புவனேஷ்வர் குமாரும், ஜாஷ் ஹேசல்வுட்டும் தொடக்கத்திலேயே ஏற்படுத்திய அழுத்தம் அமைந்தது. டெல்லி அணி 8 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில், இறுதியில் 75 ரன்கள் வரை மட்டுமே சேர்க்க முடிந்தது. பின்னர் அந்த இலக்கை ஆர்சிபி வெறும் 6.3 ஓவர்களில் எளிதாக எட்டி வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தில் புவனேஷ்வர் குமார் தனி முத்திரை பதித்தார். மூன்று ஓவர்களில் வெறும் 5 ரன்களையே வழங்கி, 3 விக்கெட்டுகளை கைப்பற்றி தன் பந்துவீச்சு திறமையை மீண்டும் நிரூபித்தார். குறிப்பாக இரண்டாவது பந்திலேயே சஹில் பரேக்கை உள்ளே நுழைந்து யார்க்கர் பாணியில் ஆட்டம் காண வைத்தது, இந்த தொடரின் சிறந்த பந்துகளில் ஒன்றாக ரசிகர்களால் பேசப்படுகிறது. அதன்பின் டிரிஸ்டன் ஸ்டப்ஸை வெளியே சென்ற பந்தில் எட்ஜ் ஆகச் செய்ததும், கேப்டன் அக்சர் படேலை உள்ளே வந்த பந்தில் தவறவிடச் செய்ததும், புவனேஷ்வரின் அனுபவமும் நுட்பமும் எவ்வளவு உயர்ந்தது என்பதை காட்டியது.

இந்த சீசனில் இதுவரை 8 போட்டிகளில் 14 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ள புவனேஷ்வர் குமார், 7.61 என்ற சிறந்த ரன்விகிதத்தையும் வைத்துள்ளார். வயதையும் அனுபவத்தையும் மீறி, அவர் இன்னும் தனது ஸ்விங் பந்துவீச்சால் பேட்டர்களுக்கு பெரிய சவாலாக இருப்பது தெளிவாகியுள்ளது. இருபுறமும் பந்து ஸ்விங் ஆகும் வகையில் அவர் அளிக்கும் துல்லியமான லைனும், நீளமும், ஆரம்ப ஓவர்களில் போட்டியை மாற்றும் வகையில் அமைந்து வருவதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில், முன்னாள் இந்திய வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் புவனேஷ்வர் குமாரை புகழ்ந்து பேசியுள்ளார். இருபுறமும் சிறப்பாக ஸ்விங் செய்யும் திறன் அவரிடம் இருப்பதாகவும், ஸ்டப்ஸ் போன்ற தரமான பேட்டரையே குழப்பத்தில் ஆழ்த்தும் அளவுக்கு அவர் பந்துவீசுவதாகவும் ஸ்ரீகாந்த் தெரிவித்தார். 2022 டி20 உலகக்கோப்பையில் ஒரு ஆட்டம் சரியாக அமையவில்லை என்பதற்காக மட்டும் அவரை புறக்கணிக்க முடியாது என்றும், அதன் பிறகு அவர் ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பாக பந்துவீசி வருகிறார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், ஐபிஎல் போட்டிகளில் புவனேஷ்வர் குமாரின் பங்களிப்பு மிக முக்கியமானது என்றும், இந்திய அணியில் அவர் இடம் பெறாதது தமக்கு புரியவில்லை என்றும் ஸ்ரீகாந்த் கருத்து தெரிவித்தார். முதல் ஸ்பெல்லிலேயே ஆட்டத்தின் போக்கை மாற்றும் திறன் அவரிடம் இருப்பதாகவும், தனது ஸ்விங் பந்துவீச்சை மிகச் சரியாக பயன்படுத்தும் சில வீரர்களில் அவர் ஒருவர் என்றும் பாராட்டினார்.

அதேபோல், ரொமாரியோ ஷெப்பர்ட் குறித்து கருத்து தெரிவித்த ஸ்ரீகாந்த், அவரை ஏன் அணியில் வைத்திருக்கிறார்கள் என்பது புரியவில்லை என்றார். நல்ல பந்துவீச்சுக்கு ஏற்ற சூழல் இருந்தும், அவர் அதிக ரன்கள் வழங்கியதாகவும், அணியில் இடம்பிடிப்பதற்கு மட்டும் அதிர்ஷ்டமே காரணமா என்ற கேள்வியும் எழுப்பினார்.