
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக புதிய அதிநவீன ஆயுதத்தை பயன்படுத்த தயாராக உள்ளோம் என ஈரான் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த அறிவிப்பு உலகளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய கிழக்கு பகுதியில் ஏற்கனவே நிலவும் பதற்றம் மேலும் அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது.
ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகின. தொடர்ந்து சுமார் 40 நாட்கள் நீடித்த மோதலுக்கு பின்னர் கடந்த 8-ஆம் தேதி இரு வார போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.
இந்த போரால் உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டது. குறிப்பாக ஹார்மூஸ் ஜலசந்தி பகுதியில் ஏற்பட்ட பதற்றம் காரணமாக பல நாடுகள் பொருளாதார சிக்கல்களை சந்தித்தன. பின்னர் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதால் நிலைமை சற்றே சீரானது.
இந்த சூழலில் போர் நிறுத்த காலக்கெடு முடிவடைந்த பின்னரும் அதை மீண்டும் நீட்டிக்கப்படும் என அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதேசமயம் ஹார்மூஸ் ஜலசந்தியை திறக்க அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது. ஆனால், அமெரிக்கா தனது பொருளாதார முற்றுகையை வாபஸ் பெற வேண்டும் என்பதே ஈரானின் நிபந்தனையாக உள்ளது.
இந்நிலையில் ஈரான் கடற்படை தளபதி ஷாராம் இரானி, எதிரி நாடுகளுக்கு கடும் அதிர்ச்சி தரும் புதிய ஆயுதம் மிக விரைவில் பயன்படுத்தப்படும் என கூறியுள்ளார். அந்த ஆயுதம் பற்றிய விவரங்களை வெளிப்படுத்தாத அவர், அது எதிரிகளுக்கு “மாரடைப்பு” அளிக்கும் அளவுக்கு அதிர்ச்சி தரும் என எச்சரித்தார்.
மேலும், அமெரிக்கா ஈரானின் எண்ணெய் வர்த்தகத்தை முடக்கி பொருளாதார நெருக்கடி ஏற்படுத்த முயல்கிறது என்றும், ஆனால் அதில் வெற்றி பெற முடியாது என்றும் அவர் தெரிவித்தார். அமெரிக்கா எங்களை நெருங்கினால் உடனடி பதிலடி கொடுக்க தயார் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரான் வெளியிட்ட இந்த புதிய மிரட்டல் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. மத்திய கிழக்கு பகுதியில் அமைதி திரும்புமா அல்லது புதிய போர் வெடிக்குமா என்ற அச்சம் தற்போது அதிகரித்துள்ளது.