
கன்னியாகுமரி மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மே 4 முதல் வெப்ப அலை தீவிரமாக இருக்கக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பொதுமக்கள் மற்றும் தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு மாவட்ட கலெக்டர் அழகுமீனா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில் பல முக்கிய உத்தரவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி, மாநகராட்சி, நகராட்சி மற்றும் உள்ளாட்சி பகுதிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் காலை 11.45 மணிக்குள் தங்களது பணிகளை முடிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் நண்பகல் 12 மணி முதல் மதியம் 3 மணி வரை தூய்மை பணியாளர்கள், கூலித் தொழிலாளர்கள், செங்கல் சூளை தொழிலாளர்கள் மற்றும் தனியார் நிறுவன தொழிலாளர்களுக்கு கட்டாய ஓய்வு வழங்க வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.
பணியாளர்களுக்கு தேவையான கையுறை, தொப்பி, குடிநீர் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை சம்பந்தப்பட்ட துறைகள் வழங்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தாகம் இல்லாவிட்டாலும் அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும். ORS கரைசல், இளநீர், மோர், பழச்சாறு போன்றவற்றை அருந்த வேண்டும். தர்பூசணி, வெள்ளரிக்காய் போன்ற நீர்ச்சத்து அதிகமான பழங்களை சாப்பிட வேண்டும். வெளியில் செல்லும்போது குடை, தொப்பி, காலணி பயன்படுத்துவது அவசியம்.
மதியம் 12 மணி முதல் 3 மணி வரை தேவையின்றி வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். வெயிலில் கடின உழைப்பு, உடற்பயிற்சி, மது, காபி, தேநீர் மற்றும் அதிக சர்க்கரை கொண்ட குளிர்பானங்களை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பேருந்து நிலையங்கள், பொதுமக்கள் கூடும் இடங்களில் தண்ணீர் பந்தல் மற்றும் ORS வசதி ஏற்படுத்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளில் வெப்ப அலை சிகிச்சைக்காக தனி பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் ORS இலவசமாக வழங்கப்படும்.
வெப்ப அலை தொடர்பான அவசர உதவிக்கு 1077 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.