
சென்னையில் மெட்ரோ ரெயில் பயணிகளுக்காக புதிய மாற்றமாக இன்று முதல் ‘சிங்கார சென்னை அட்டை’ நடைமுறைக்கு வந்துள்ளது. சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், பழைய பயண அட்டையை மாற்றி தேசிய பொது போக்குவரத்து அட்டையான ‘சிங்கார சென்னை அட்டை’ முறைக்கு முழுமையாக மாறியுள்ளது.
சென்னையில் தற்போது வண்ணாரப்பேட்டை – விமான நிலையம் நீல வழித்தடம் மற்றும் சென்ட்ரல் – பரங்கிமலை பச்சை வழித்தடம் வழியாக மொத்தம் 54.1 கிலோமீட்டர் தூரத்திற்கு தினமும் காலை 4.30 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படுகின்றன. தினசரி சராசரியாக 3 லட்சம் பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர்.
இதுவரை பயணிகள் பயன்படுத்தி வந்த பழைய மெட்ரோ பயண அட்டைகள் இன்று முதல் ரீசார்ஜ் செய்ய முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக தேசிய பொது போக்குவரத்து அட்டையான ‘சிங்கார சென்னை அட்டை’ முழுமையாக அமலுக்கு வந்துள்ளது. இந்த அட்டை மூலம் மெட்ரோ ரெயில் பயணம் மட்டுமின்றி வாகன நிறுத்த சேவைகளையும் பயன்படுத்தலாம்.
பயணிகள் தங்களது பழைய அட்டையில் உள்ள மீதத் தொகையை சென்னை மெட்ரோ மொபைல் செயலி மூலம் QR சேமிப்பு பாஸ் அல்லது புதிய சிங்கார சென்னை அட்டைக்கு மாற்றிக் கொள்ளலாம்.
மேலும், சென்னை மெட்ரோ செயலி, வாட்ஸ்-அப் QR டிக்கெட், ரெட்பஸ், டிஜிட்டல் ஸ்கேன் வசதி, டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு போன்ற பல்வேறு நவீன கட்டண முறைகளும் தொடரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த புதிய நடைமுறையால் சென்னை மக்களுக்கு வேகமான, எளிமையான, இந்தியா முழுவதும் ஒரே அட்டையில் பயணிக்க கூடிய வசதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.