
‘வல்லமை’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகர் பிரேம்ஜி புதிய பரிமாணத்தில் ரசிகர்களை சந்திக்க உள்ளார். இதுவரை நகைச்சுவை மற்றும் வித்தியாசமான கதாபாத்திரங்களில் பிரபலமான பிரேம்ஜி, தற்போது முழுநீள ஹாரர் பட நாயகனாக நடிக்கிறார் என்ற தகவல் ரசிகர்களிடையே ஆவலை ஏற்படுத்தியுள்ளது.
பேட்லர்ஸ் சினிமா நிறுவனம் சார்பில் கருப்பையா முருகன் தயாரித்து இயக்கிய ‘வல்லமை’ திரைப்படம் விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக சமூகத்தில் நடைபெறும் பெண் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களை மையமாக கொண்டு வெளியான அந்த படம் பலராலும் பாராட்டப்பட்டது. அந்த படத்தில் பிரேம்ஜி வித்தியாசமான கோணத்தில் தோன்றி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார்.
இந்த வெற்றியைத் தொடர்ந்து கருப்பையா முருகன் மற்றும் பிரேம்ஜி கூட்டணி மீண்டும் இணைகிறது. இம்முறை மியூசிக்கல் ஹாரர் திரைப்படமாக படம் உருவாக உள்ளது. வழக்கமான பயமுறுத்தும் கதையை தாண்டி இசையும் திகிலும் கலந்த புதுமையான திரைக்கதையுடன் படம் தயாராகிறது என கூறப்படுகிறது.
இந்த படத்திற்கு சூரஜ் நல்லுசாமி ஒளிப்பதிவு செய்கிறார். மேலும், படத்தின் இசையமைப்பையும் பிரேம்ஜி தான் கவனிக்கிறார். நடிகராக மட்டுமல்லாமல் இசையமைப்பாளராகவும் பிரேம்ஜி ரசிகர்களை கவர உள்ளார்.
பிரேம்ஜியை ஹாரர் பட ஹீரோவாக பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். விரைவில் படத்தின் தலைப்பு மற்றும் மற்ற நடிகர் பட்டியல் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.