
செயற்கை நுண்ணறிவு (AI) வளர்ச்சியால் தகவல் தொழில்நுட்ப துறையில் வேலை வாய்ப்புகள் குறையுமா என்ற அச்சம் நிலவி வரும் நிலையில், இன்போசிஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சலில் பரேக் முக்கிய விளக்கமளித்துள்ளார். இந்த ஆண்டு நிறுவனத்தில் ஆட்குறைப்பு செய்யப்படாது என்றும், பணியாளர்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஏஐ தொழில்நுட்பம் காரணமாக சில பணிமுறைகள் மாறினாலும், அது வேலைகளை முற்றிலும் குறைப்பதற்காக அல்ல. மாறாக புதிய திறன்கள், புதிய வேலை வாய்ப்புகள் மற்றும் புதிய துறைகளை உருவாக்கும் என சலில் பரேக் கூறியுள்ளார். தொழில்நுட்ப மாற்றங்களை ஏற்றுக்கொண்டு பணியாளர்கள் திறன் மேம்பாட்டில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், இந்த ஆண்டில் மட்டும் 20 ஆயிரம் புதிய பட்டதாரிகளை பணியமர்த்த இன்போசிஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இது ஐடி துறையில் வேலை தேடும் இளைஞர்களுக்கு பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
அதேபோல், ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் ரூ.750 கோடி முதலீட்டில் புதிய கிளை அலுவலகம் தொடங்கப்பட உள்ளது. இந்த புதிய வளாகத்தின் மூலம் சுமார் 7 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏஐ வளர்ச்சியால் பணியாளர் குறைப்பு அல்ல, வேலை வாய்ப்பு மாற்றம் மற்றும் வளர்ச்சி தான் வரும் என இன்போசிஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் ஐடி துறையில் உள்ள பணியாளர்கள் மற்றும் வேலை தேடும் பட்டதாரிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.