
சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான எல்பிஜி சிலிண்டர் விலை இன்று முதல் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. மாதத்தின் முதல் நாளான இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்ட புதிய விலைப்பட்டியலின்படி, 19 கிலோ எடையுடைய வணிக சிலிண்டர் விலை ரூ.993 உயர்ந்து ரூ.3,237 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் இந்தியன் ஆயில் நிறுவனங்கள் நாடு முழுவதும் வீட்டு பயன்பாட்டிற்கும் வணிக பயன்பாட்டிற்கும் சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகம் செய்து வருகின்றன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு உள்ளிட்ட காரணிகளை அடிப்படையாக கொண்டு மாதந்தோறும் விலைகள் மாற்றப்படுகின்றன.
இந்த நிலையில், வீட்டு பயன்பாட்டிற்கான 14.2 கிலோ எடை கொண்ட சமையல் சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஆனால் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை பெரிதும் உயர்த்தப்பட்டுள்ளதால் ஹோட்டல்கள், உணவகங்கள், டீக்கடைகள், பேக்கரிகள் உள்ளிட்ட சிறு மற்றும் பெரிய வணிக நிறுவனங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளன.
இந்த விலை உயர்வால் உணவுப் பொருட்களின் விலையும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக வணிகர்கள் கவலை தெரிவித்துள்ளனர். குறிப்பாக ஹோட்டல் உணவு, டீ, காபி, டிபன், பேக்கரி பொருட்கள் ஆகியவற்றின் விலைகளில் உயர்வு ஏற்படலாம் என கூறப்படுகிறது.
மற்ற நகரங்களிலும் விலை உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. டெல்லியில் வணிக சிலிண்டர் ரூ.3,071.50க்கும், கொல்கத்தாவில் ரூ.3,202க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மாநிலங்களுக்கு ஏற்ப வரி மற்றும் போக்குவரத்து செலவுகள் காரணமாக விலை மாறுபடும்.