டெல்லி: தமிழகத்தின் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் வி. மோகனா, உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 75 ஆண்டுகளில், உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றாமல் நேரடியாக உச்ச நீதிமன்ற நீதிபதியாக உயர்ந்த 11-வது நபர் என்ற அரிய சாதனையை அவர் படைத்துள்ளார். தமிழ்நாட்டிலிருந்து உச்ச நீதிமன்ற நீதிபதியான இரண்டாவது பெண் என்ற பெருமையையும், வழக்கறிஞர் நிலையிலிருந்து நேரடியாக உச்ச நீதிமன்ற நீதிபதியாகும் இரண்டாவது பெண் என்ற பெருமையையும் இவர் பெற்றுள்ளார்.

மத்திய அரசு அறிவிப்பின்படி, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்கப் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, நீதிபதிகளின் எண்ணிக்கையை 38-ஆக உயர்த்த மத்திய அரசு ஏற்கனவே நடவடிக்கை எடுத்தது. அதன்படி, தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான கொலீஜியம் கடந்த வாரம் வி. மோகனா உட்பட ஐந்து பேரின் பெயர்களைப் பரிந்துரைத்தது. அந்தப் பரிந்துரைகளை ஏற்ற மத்திய அரசு தற்போது அதிகாரப்பூர்வமாக நியமன அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

புதிய நீதிபதிகளாக தமிழகத்தைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் வி. மோகனா, பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி ஷகீல் நாலு, மும்பை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி ஸ்ரீ சந்திரசேகர், மத்திய பிரதேச உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீव் சச்தேவா மற்றும் ஜம்மு-காஷ்மீர், லடாக் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி அருண் பள்ளி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நியமனத்தால் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை தலைமை நீதிபதி உட்பட 37-ஆக உயர்ந்துள்ளது.

வி. மோகனாவுக்கு தமிழக முதலமைச்சர் விஜய் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். வி. மோகனாவின் நியமனத்தில் ஒரு சிறப்பு அம்சமும் உள்ளது. பொதுவாக உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படுபவர்கள் உயர் நீதிமன்ற நீதிபதிகளாகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்களாக இருப்பார்கள். ஆனால், வழக்கறிஞர் நிலையிலிருந்து நேரடியாக உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படுவது மிகவும் அரிதான நிகழ்வாகும்.

1950-ஆம் ஆண்டிலிருந்து இதுவரை வெறும் 10 பேர் மட்டுமே வழக்கறிஞர் நிலையிலிருந்து நேரடியாக உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். தற்போது வி. மோகனா அந்தப் பட்டியலில் 11-வது நபராக இடம்பிடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல், வழக்கறிஞர் நிலையிலிருந்து நேரடியாக உச்ச நீதிமன்ற நீதிபதியாகும் இரண்டாவது பெண் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். இதற்கு முன்பு நீதிபதி இந்து மல்ஹோத்ரா மட்டுமே இந்தச் சாதனையை நிகழ்த்தியிருந்தார்.

மேலும் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், டெல்லியில் வழக்கறிஞராகப் பணியாற்றிய இந்து மல்ஹோத்ராவிடம் ஜூனியராகப் பயிற்சி பெற்றவர்தான் தற்போது உச்ச நீதிமன்ற நீதிபதியாக உயர்ந்துள்ள வி. மோகனா. கோவை சட்டக் கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்த வி. மோகனா, மூத்த குடிமக்களின் சொத்துரிமை வழக்குகள், கர்நாடக ஹிஜாப் தடை வழக்கு உள்ளிட்ட பல முக்கிய வழக்குகளில் வாதாடித் தனது திறமையை நிரூபித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மோகனா தற்போதைய உச்ச நீதிமன்ற நீதிபதி கே. விஸ்வநாதனுடன் ஒரே கல்லூரியில் பயின்றவர். கோவையைப் பூர்வீகமாகக் கொண்ட வழக்கறிஞர் வி. மோகனா, சட்டத்துறையில் நீண்ட கால அனுபவம் பெற்றவர். கோவை அரசு சட்டக்கல்லூரியில் கடந்த 1988-ஆம் ஆண்டு சட்டம் பயின்றார். கடந்த 2015-ஆம் ஆண்டு ஏப்ரல் 23-ஆம் தேதி இவர் மூத்த வழக்கறிஞர் என்ற அந்தஸ்த்தைப் பெற்றார். உச்ச நீதிமன்றத்தில் பல முக்கிய  சிக்கலான வழக்குகளில் திறம்பட வாதாடியுள்ளார். நம் நாட்டின் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட ஐந்தாண்டு சட்டப்படிப்பின் முதல் பேட்ச் சட்டம் பயின்றார். கபில் சிபல், கே.கே. வேணுகோபால் உள்ளிட்ட புகழ்பெற்ற மூத்த வழக்கறிஞர்களுடன் இணைந்து பல முக்கிய விவகாரங்களில் இணைந்து செயல்பட்டுள்ளார்.