தமிழக பா.ஜ.க. மாநில விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவு செயலாளரும், இந்தியாவின் முதல் பெண் தேசிய மோட்டார் பந்தய சாம்பியனுமான அலிஷா அப்துல்லா, யூடியூபர் முக்தார் மற்றும் திருச்சி சூர்யா ஆகியோருக்கு எதிராக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.
அலிஷா அப்துல்லா தனது புகாரில், கடந்த இரண்டு ஆண்டுகளாக அரசியலில் தன்னைப் பற்றி அவதூறாக பேசப்பட்டதாகவும், சமீபத்தில் வெளியிடப்பட்ட வீடியோவில் தனது இரட்டை குழந்தைகள் குறித்து அவமதிப்பான கருத்துகள் கூறப்பட்டதாகவும் குறிப்பிட்டார். அந்த வீடியோவில், ஒரு குழந்தை தனது முகத்தைப் போலவும், மற்றொரு குழந்தை அண்ணாமலை போலவும் இருப்பதாக புகைப்படம் இணைத்து பதிவிட்டதாக அவர் தெரிவித்தார்.
அலிஷா, “இதை நான் விடமாட்டேன். அவர்கள் இருவரையும் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். இல்லையெனில் நான் வேறு விதமாக நடவடிக்கை எடுப்பேன்” என்று எச்சரித்தார். மேலும், முக்தார் சமீபத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்ததாகவும், அவருக்கு அரசியல் ஆதரவு இருப்பதாகவும் கூறினார். இதனால், தற்போதைய த.வெ.க. அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இந்த புகாரின் அடிப்படையில், போலீஸ் முதலில் திருச்சி சூர்யாவை கைது செய்தது. பின்னர், அலிஷா அப்துல்லா அளித்த புகாரின் அடிப்படையில் பிரபல யூடியூபர் முக்தாரும் கர்நாடகாவில் கைது செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசியல், சமூக மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை குறிவைத்து அவதூறு பரப்பும் செயல்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக செயல்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.