வாஷிங்டன்: ஹார்முஸ் ஜலசந்தியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்காவின் அதிநவீன அப்பாச்சி ரக ஹெலிகாப்டரை ஈரான் ராணுவம் சுட்டு வீழ்த்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஓமன் கடற்கரைக்கு அருகே அதிகாலை 3:30 மணியளவில் ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானது. அதில் இருந்த இரண்டு விமானிகளும் அமெரிக்க கடற்படையின் டாஸ்க் ஃபோர்ஸ் 59 பிரிவின் கடற்பரப்பு ட்ரோன் உதவியுடன் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

இந்த சம்பவத்தை அடுத்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது சமூக வலைதளத்தில், “இந்த தாக்குதலை சாதாரணமாகக் கடந்து செல்ல முடியாது. ஈரானின் கொடூரத் தாக்குதலுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும்” எனக் குறிப்பிட்டார்.

அதன்படி, அமெரிக்க மத்திய கட்டளை மையம் வெளியிட்ட அறிவிப்பில், “மாலை 5 மணிக்கு ஈரான் மீது அமெரிக்கப் படைகள் தற்காப்பு தாக்குதல்களை தொடங்கின. அப்பாச்சி ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கு பதிலடியாக, முப்படைகளின் தலைமைத் தளபதி உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது” எனத் தெரிவித்தது.

இதற்கு பதிலளித்த ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, “எந்த தாக்குதலுக்கும் ஈரான் அமைதியாக இருக்காது. எங்கள் ஆயுதப் படைகள் தகுந்த பதிலடி கொடுக்கும். பாதுகாப்பாக இருக்க விரும்பினால் எங்கள் பிராந்தியத்தை விட்டு வெளியேற வேண்டும்” என எச்சரித்தார்.

பாரசீக வளைகுடா பிராந்தியத்தில் நிலவும் இந்த பதற்றநிலை, அங்கு அமைதியை சீர்குலைக்கும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான இந்த மோதல், சர்வதேச அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.