சென்னை: லெபனான் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) கடுமையாக கண்டித்துள்ளது. மேலும், அமெரிக்கா – ஈரான் இடையிலான அமைதி பேச்சுவார்த்தையை சீர்குலைக்கும் இந்த நடவடிக்கையை மத்திய பாஜக அரசு கண்டிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் மு. வீரபாண்டியன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பாகிஸ்தான் மற்றும் கத்தார் நாடுகளின் மத்தியஸ்த முயற்சிகளின் விளைவாக அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதன் மூலம் மேற்காசியாவில் அமைதி திரும்பும் சூழல் உருவாகியுள்ளதுடன், உலகளாவிய எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு பிரச்சினைகளுக்கும் தீர்வு காணும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தும் நோக்கில் சுவிட்சர்லாந்தில் இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையில், ஈரானின் நட்பு நாடான லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியிருப்பது கண்டனத்திற்குரியது என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த நடவடிக்கை அமெரிக்கா – ஈரான் அமைதி பேச்சுவார்த்தையை பாதிக்கும் முயற்சியாக கருதப்படுவதாகவும், மேற்காசியாவில் நீடிக்கும் போர் பதற்றம் அங்கு பணியாற்றும் லட்சக்கணக்கான இந்தியர்கள் மற்றும் தமிழர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, பிராந்திய அமைதியை சீர்குலைக்கும் இஸ்ரேலின் நடவடிக்கையை மத்திய அரசு வெளிப்படையாக கண்டிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்தியுள்ளது.