மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தலைநகர் மும்பையில் இன்று காலை பெய்த கனமழை பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை கடுமையாக பாதித்தது. நகரின் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மழைநீர் தேங்கியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களும் பெரும் சிரமத்தை சந்தித்தனர்.

இந்தியாவின் முக்கிய பெருநகரங்களில் ஒன்றான மும்பை, ஆண்டுதோறும் ஜூன் முதல் ஆகஸ்ட் மாதம் வரை பருவமழையின் தாக்கத்தை அதிகமாக சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு பருவமழை சற்று தாமதமாக தொடங்கியிருந்தாலும், தற்போது அதன் தீவிரம் அதிகரித்து வருகிறது. காலநிலை மாற்றத்தின் தாக்கம் காரணமாகவே மழை வருகை தாமதமானதாக வானிலை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்று காலை முதலே மும்பையின் பல பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை கொட்டித் தீர்த்தது. மணிக்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றும் வீசியது. இதன் காரணமாக நகரின் முக்கிய சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் வேகமாக தேங்கியது.

மழை காரணமாக அந்தேரி, பாந்த்ரா, தாதர், குர்லா உள்ளிட்ட பல பகுதிகளில் வாகனங்கள் மெதுவாக நகர்ந்தன. குறிப்பாக வெஸ்டர்ன் எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சாலையில் மழைநீர் தேங்கியதோடு, ஒரு சரக்கு வாகனம் விபத்தில் சிக்கியதால் போக்குவரத்து மேலும் பாதிக்கப்பட்டது.

நகரின் முக்கிய சுரங்கப்பாதைகளிலும் மழைநீர் புகுந்ததால், சில இடங்களில் வாகன போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதனால் அலுவலகங்களுக்கு செல்லும் ஊழியர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு சென்ற மாணவர்கள் தாமதத்தை சந்தித்தனர்.

வாரத்தின் முதல் வேலை நாளான திங்கட்கிழமையிலேயே மழை தீவிரமடைந்ததால், நகரின் இயல்பு செயல்பாடுகள் பாதிக்கப்பட்டன. பலர் பொதுப் போக்குவரத்து சேவைகளை பயன்படுத்த முடியாமல் சிரமப்பட்டனர். சில பகுதிகளில் ரயில் சேவைகளும் தாமதமாக இயக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளுக்கு செவ்வாய்க்கிழமை வரை மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், வரும் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மழைப்பொழிவு இன்னும் அதிகரிக்கக்கூடும் என எச்சரித்துள்ளது.

சமூக வலைதளங்களிலும் மும்பை மழை முக்கிய விவாதமாக மாறியுள்ளது. பலர் சாலைகளில் தேங்கிய நீர், போக்குவரத்து நெரிசல், பலத்த காற்று மற்றும் கனமழை தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்களை பகிர்ந்து வருகின்றனர். அவை வைரலாகி பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும், தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

பருவமழை தீவிரமடையும் சூழலில், மும்பை மாநகராட்சி மற்றும் பேரிடர் மேலாண்மை குழுக்கள் முழு கண்காணிப்பிலும் இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தண்ணீர் வடிகால் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.