புதுடெல்லி:

இந்தியாவின் ரஃபேல் போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் முன்வைத்து வந்த குற்றச்சாட்டை இந்தியா மீண்டும் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இந்திய விமானப்படையில் உள்ள அனைத்து 36 ரஃபேல் போர் விமானங்களும் தற்போது முழுமையாக சேவையில் இருப்பதாக அதிகாரப்பூர்வ ஆவணங்கள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, மே 6-ஆம் தேதி இரவு இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இதனைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து, எல்லைப்பகுதிகளில் ராணுவ மோதல் ஏற்பட்டது.

இந்த சூழலில், இந்தியாவின் 5 ரஃபேல் போர் விமானங்களை தங்களது படைகள் சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் தரப்பு பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்தது. ஆனால் அந்த தகவலை இந்தியா உடனடியாக மறுத்ததோடு, எந்த ரஃபேல் விமானமும் இழக்கப்படவில்லை என்று தெரிவித்திருந்தது.

இந்நிலையில், இந்திய விமானப்படை வெளியிட்டுள்ள புதிய ஆவணங்கள் பாகிஸ்தானின் அந்த கூற்றை முற்றிலும் தவறானது என நிரூபிப்பதாக கூறப்படுகிறது. 2016-ஆம் ஆண்டு இந்தியா மற்றும் பிரான்ஸ் இடையே கையெழுத்தான ஒப்பந்தத்தின் அடிப்படையில் வாங்கப்பட்ட 36 ரஃபேல் போர் விமானங்களும் தற்போது விமானப்படை சேவையில் தொடர்ந்து செயல்பட்டு வருவதாக அந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இந்த விமானங்களின் பராமரிப்பு மற்றும் தொழில்நுட்ப ஆதரவுக்காக 5 மாத கால ‘பிரிட்ஜ் சப்போர்ட்’ திட்டத்திற்கான புதிய ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. இதில் அனைத்து 36 விமானங்களுக்கும் தேவையான பராமரிப்பு வசதிகள், உதிரி பாகங்கள் மற்றும் தொழில்நுட்ப உதவிகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதோடு, அடுத்த ஐந்து மாத காலத்தில் ரஃபேல் விமானங்கள் சுமார் 2,250 மணி நேரம் பறக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் அனைத்து விமானங்களும் முழுமையான செயல்பாட்டு நிலையில் இருப்பது உறுதியாகியுள்ளது.

பாதுகாப்பு வட்டாரங்கள் கூறுகையில், ரஃபேல் விமானங்களில் ஏதேனும் ஒன்று இழக்கப்பட்டிருந்தால், பராமரிப்பு ஒப்பந்தத்தில் விமானங்களின் எண்ணிக்கை குறைந்திருக்கும். ஆனால் அனைத்து 36 விமானங்களும் பராமரிப்பு பட்டியலில் இடம்பெற்றிருப்பது, எந்தவித இழப்பும் ஏற்படவில்லை என்பதை தெளிவாக காட்டுகிறது என தெரிவித்தன.

பிரான்ஸ் நிறுவனமான டசால்ட் ஏவியேஷன் தயாரித்த ரஃபேல் போர் விமானங்கள் இந்திய விமானப்படையின் முக்கிய தாக்குதல் சக்தியாக கருதப்படுகின்றன. அதிநவீன ரேடார், நீண்ட தூர ஏவுகணை திறன் மற்றும் பல்வேறு போர் திறன்களுடன் செயல்படும் இந்த விமானங்கள் இந்தியாவின் வான்படை வலிமையை மேலும் அதிகரித்துள்ளன.

இதனால், ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின்போது பல ரஃபேல் விமானங்கள் அழிக்கப்பட்டதாக பாகிஸ்தான் வெளியிட்ட தகவல்கள் உண்மையற்றவை என இந்தியா மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த விளக்கம் இந்தியாவின் ராணுவ நடவடிக்கைகள் குறித்து பரவிய பல்வேறு ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக பார்க்கப்படுகிறது.