மும்பை:

மகாராஷ்டிரா மாநில தலைநகர் மும்பையை கடந்த 24 மணி நேரமாக கொட்டித்தீர்த்த கனமழை கடுமையாக பாதித்துள்ளது. நகரின் பல முக்கிய பகுதிகள் வெள்ளநீரில் மூழ்கியுள்ளதுடன், சாலை மற்றும் ரயில் போக்குவரத்தும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தாதர் ரயில் நிலையம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின்படி, மும்பையின் பல பகுதிகளில் 24 மணி நேரத்தில் 300 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழை பதிவாகியுள்ளது. தெற்கு மும்பையில் மட்டும் 248 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. கடந்த பத்து ஆண்டுகளில் ஜூன் மாதத்தில் ஒரே நாளில் பதிவான அதிகபட்ச மழையாக இது கருதப்படுகிறது.

கனமழை காரணமாக மும்பை, தானே, பால்கர், ராய்கட் மற்றும் சிந்துதுர்க் உள்ளிட்ட பகுதிகளுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் முதலில் சிவப்பு எச்சரிக்கை விடுத்தது. பின்னர் நிலைமையை ஆய்வு செய்து ஆரஞ்சு எச்சரிக்கையாக மாற்றினாலும், தொடர்ந்து கனமழை நீடிப்பதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நேற்று இரவு முதல் இன்று காலை வரை இடைவிடாமல் பெய்த மழையால் நகரின் பல்வேறு பகுதிகளில் கடுமையான நீர் தேக்கம் ஏற்பட்டது. குறிப்பாக மத்திய மற்றும் மேற்கு புறநகர் ரயில் பாதைகள் இணையும் முக்கிய மையமான தாதர் ரயில் நிலையம் வெள்ளநீரில் மூழ்கியது. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

மேலும், அந்தேரி சுரங்கப்பாதையில் நீர் தேங்கியதால் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பல முக்கிய சாலைகளில் வாகனங்கள் நீண்ட நேரம் நெரிசலில் சிக்கிக் கொண்டன. நகரின் பல இடங்களில் மரங்கள் சாய்ந்த சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

விக்ரோலி பகுதியில் குடியிருப்பு ஒன்றின் அருகே இருந்த தடுப்புச் சுவர் இடிந்து விழுந்தது. அதேபோல் தாதர் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த கார் மீது மரம் விழுந்ததில் வாகனம் சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மும்பை மாநகராட்சி வெளியிட்ட தகவலின்படி, செவ்வாய்க்கிழமை காலை முதல் புதன்கிழமை காலை வரை நகரின் பல்வேறு பகுதிகளில் 300 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழை பதிவாகியுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் வகைப்படுத்தலின்படி, 24 மணி நேரத்தில் 204.4 மில்லிமீட்டருக்கும் அதிகமாக பெய்யும் மழை “மிகக் கடுமையான மழை” என கருதப்படுகிறது.

தொடர்ந்து கனமழை பெய்யும் வாய்ப்பு இருப்பதால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறும், பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை வழக்கத்தை விட 13 நாட்கள் தாமதமாக ஜூன் 23-ஆம் தேதி மும்பையை எட்டிய நிலையில், தொடக்க நாளிலேயே கனமழை நகரின் இயல்பு வாழ்க்கையை கடுமையாக பாதித்துள்ளது.