சென்னை: தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான முதல் கனமழை வரை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 7 நாட்களுக்கு மழை தொடரும் எனவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.
வானிலை ஆய்வு மையத்தின் தகவலின்படி, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் சுமார் 5.8 கிலோமீட்டர் உயரத்தில் வளிமண்டல சுழற்சி நிலவி வருகிறது. இதன் தாக்கத்தால் தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்யும் சூழல் உருவாகியுள்ளது.
இன்று (ஜூன் 23) தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட தமிழக பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஜூன் 24ஆம் தேதி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை தொடரும். மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழையும், மணிக்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் காற்றும் வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் பல இடங்களில் மழை தொடரும். குறிப்பாக கோயம்புத்தூர் மலைப்பகுதிகள், நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. இடி மின்னலுடன் கூடிய பலத்த காற்றும் வீசக்கூடும் என்பதால் பொதுமக்கள் கவனமாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஜூன் 27 மற்றும் 28 தேதிகளில் நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, கன்னியாகுமரி, மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
ஜூன் 29ஆம் தேதியும் நீலகிரி, கோயம்புத்தூர், தேனி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் கனமழை தொடர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை மற்றும் இரவு நேரங்களில் நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 38 முதல் 39 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும் என்றும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 முதல் 29 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, மீனவர்களுக்கும் முக்கிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும். இடையிடையே காற்றின் வேகம் 60 கிலோமீட்டர் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
அதேபோல் கர்நாடக கடலோரப்பகுதிகள், லட்சத்தீவு மற்றும் மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளிலும் பலத்த காற்று வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றம் இருக்காது என்றும், இயல்பை ஒட்டிய அல்லது இயல்பை விட சற்று குறைவான வெப்பநிலை பதிவாகும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.