சென்னை:

திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டுள்ளனர். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லம் உள்ளிட்ட மொத்தம் 13 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

இந்த நடவடிக்கைக்கு காரணமாக, மாநில நெடுஞ்சாலைத் துறையில் நடைபெற்றதாக கூறப்படும் ரூ.3.23 கோடி முறைகேடு குற்றச்சாட்டு கூறப்படுகிறது. இதுதொடர்பாக எ.வ.வேலு மற்றும் முன்னாள் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் உட்பட 11 பேர் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

லஞ்ச ஒழிப்புத்துறை வெளியிட்ட தகவலின்படி, கரூர் மாவட்டத்தில் வாரணாசி-கன்னியாகுமரி சாலை மேம்பாடு, மன்மங்கலம்-நன்னியூர் சாலை, நெரூர்-தளவாபாளையம் சாலை மற்றும் கரூர்-விரியம்பட்டி சாலை உள்ளிட்ட 4 திட்டங்களுக்கு ரூ.4.9 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.

ஆனால் 2022 மார்ச் மாதம் வரை பணிகள் முழுமையாக மேற்கொள்ளப்படாத நிலையிலும், ஒப்பந்ததாரருக்கு சுமார் 77 சதவீத தொகையான ரூ.3.23 கோடி இரண்டு தவணைகளாக வழங்கப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த முறைகேடு தொடர்பாக ஏற்கனவே 4 அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பணிகள் நடைபெறாத நிலையில் அரசுப் பணம் விடுவிக்கப்பட்டதால், ஒப்பந்ததாரர் சட்டவிரோதமாக பலன் அடைந்ததாகவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தங்களது கடமையை நேர்மையற்ற முறையில் நிறைவேற்றியதாகவும் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்று 40 நாட்களே ஆன நிலையில், முன்னாள் அமைச்சருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்து சோதனை நடத்துவது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.