காஞ்சிபுரம்:

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மாநில அரசுகள் கடன் வாங்குவதில் தவறில்லை என்றாலும், அந்தக் கடன் தொகையை நலத்திட்டங்களுக்கு மட்டும் செலவிடுவது சரியான நடைமுறை அல்ல என்று தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கடன் வாங்குவதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால் அந்தக் கடன் எதற்காக பயன்படுத்தப்படுகிறது என்பதே முக்கியம். கடன் தொகையை அடிப்படை கட்டமைப்பு வசதிகள், கல்வி, மருத்துவம் மற்றும் தொழில் முதலீடுகள் போன்ற நீண்டகால வளர்ச்சித் திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டும்” என்றார்.

மேலும், “இந்த வகையான முதலீடுகள் பொருளாதார வளர்ச்சியை உருவாக்கும். அதன்மூலம் வருவாய் அதிகரித்து, பின்னர் நலத்திட்டங்களை செயல்படுத்த முடியும். கடன் வாங்கி நலத்திட்ட உதவிகளுக்கு மட்டும் செலவிடுவது பொருளாதார ரீதியாக நிலையான அணுகுமுறை அல்ல” என்றும் அவர் குறிப்பிட்டார்.

தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்க வேண்டிய நிதி தொடர்பாக பேசுகையில், “திமுக ஆட்சிக் காலத்திலும் தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய நிதி முறையாக வழங்கப்பட்டது. தற்போது தமிழகத்திற்கு வழங்க வேண்டிய எந்த நிதியும் நிலுவையில் இல்லை. எதிர்காலத்திலும் வழங்க வேண்டிய நிதி உரிய முறையில் வழங்கப்படும்” என்று தெரிவித்தார்.

தமிழக அரசு மத்திய அரசுடன் இணைந்து செயல்படுவதாக கூறியிருப்பது வரவேற்கத்தக்கது என்றும் அவர் பாராட்டினார்.

சட்டப்பேரவையில் நடைபெறும் அரசியல் விமர்சனங்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, “ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் தங்களது கருத்துகளை சட்டப்பேரவையில் வெளிப்படுத்துவது ஜனநாயகத்தின் ஒரு பகுதியாகும். அதில் எந்தத் தவறும் இல்லை” என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.