சென்னை:
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனமான என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தில் மத்திய அரசின் பங்குகளை விற்பனை செய்யும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் ச.ஜோசப் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.
மத்திய அரசு, என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தில் தன்னுடைய பங்குகளில் ஒரு பகுதியை ‘விற்பனைக்கான சலுகை’ (Offer For Sale) முறையில் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. இதன்படி 2 சதவீத அடிப்படை பங்குகளுடன் கூடுதலாக 1 சதவீத ‘கிரீன் ஷூ’ ஆப்ஷன் சேர்த்து மொத்தம் 3 சதவீத பங்குகளை விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த முடிவுக்கு தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், என்.எல்.சி. நிறுவனத்தில் மத்திய அரசின் பங்குகளை மேலும் குறைக்கும் எந்த நடவடிக்கையையும் தமிழ்நாடு அரசு கொள்கை ரீதியாக ஏற்க முடியாது என்று முதல்-அமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.
கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது, என்.எல்.சி. இந்தியா நிறுவனம் என்பது வெறும் பொதுத்துறை நிறுவனம் மட்டுமல்ல. அதன் தோற்றம், வளர்ச்சி மற்றும் செயல்பாடுகள் அனைத்தும் தமிழ்நாட்டுடன் நெருங்கிய தொடர்புடையவை. நிறுவனத்தின் தலைமையகம் நெய்வேலியில் அமைந்துள்ளது. பழுப்பு நிலக்கரி சுரங்கங்கள் மற்றும் முக்கிய அனல் மின் நிலையங்களும் தமிழ்நாட்டிலேயே செயல்பட்டு வருகின்றன.
இந்த நிறுவனம் பல தசாப்தங்களாக தமிழக அரசின் ஒத்துழைப்பு, நில கையகப்படுத்தல், உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் உள்ளூர் மக்களின் ஆதரவுடன் வளர்ச்சி பெற்றுள்ளது. எனவே, இந்த நிறுவனத்தின் மீது தமிழ்நாட்டிற்கு நியாயமான மற்றும் நிலையான உரிமை உள்ளது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், என்.எல்.சி. இந்தியா நிறுவனம் நாட்டின் எரிசக்தி பாதுகாப்பு, கனிம வள மேம்பாடு மற்றும் முக்கிய உள்கட்டமைப்பு வளர்ச்சியில் முக்கிய பங்காற்றி வருகிறது. இத்தகைய தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனத்தில் மத்திய அரசின் பங்குகளை குறைப்பது எதிர்காலத்தில் தவறான முன்னுதாரணமாக அமையும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
மத்திய அரசின் பங்குகள் குறைவது என்பது வெறும் நிதி சார்ந்த முடிவு அல்ல. அது மாநில மக்களின் நீண்டகால நலன், வேலைவாய்ப்பு பாதுகாப்பு மற்றும் நாட்டின் எரிசக்தி தன்னிறைவு ஆகியவற்றையும் பாதிக்கக்கூடியது என்று கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறிப்பாக, பல ஆண்டுகளாக பொதுத்துறை நிறுவனங்கள் மக்கள் நலன் மற்றும் தேசிய வளர்ச்சிக்காக செயல்பட்டு வரும் நிலையில், அவற்றின் பொதுவுடைமை தன்மையை பாதுகாப்பது மிகவும் அவசியம் என தமிழ்நாடு அரசு கருதுவதாகவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.
என்.எல்.சி. போன்ற முக்கிய நிறுவனங்கள் தொடர்ந்து முழுமையாக அரசின் கட்டுப்பாட்டிலும் உரிமையிலும் இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
எனவே, என்.எல்.சி. இந்தியா நிறுவன பங்குகளை விற்பனை செய்யும் முடிவை மத்திய அரசு மறுபரிசீலனை செய்து திரும்பப் பெற வேண்டும் என பிரதமர் மோடியிடம் முதல்-அமைச்சர் விஜய் கேட்டுக் கொண்டுள்ளார்.
தமிழ்நாடு அரசின் கருத்துகளையும், கொள்கை ரீதியான ஆட்சேபனைகளையும் மத்திய அரசு உரிய முறையில் பரிசீலிக்கும் என்ற நம்பிக்கையையும் அவர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தமிழக அரசியல் மற்றும் தொழில்துறை வட்டாரங்களில் முக்கிய கவனத்தை ஈர்த்துள்ளது.