புதுடெல்லி:
அமேசான் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஆண்டி ஜாஸ்சி, பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்புக்கு பிறகு இந்தியாவில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரூ.4.1 லட்சம் கோடிக்கும் அதிகமான முதலீடு செய்ய இருப்பதாக அமேசான் நிறுவனம் அறிவித்துள்ளது.
உலகின் முன்னணி இ-காமர்ஸ் மற்றும் கிளவுட் சேவை நிறுவனங்களில் ஒன்றான அமேசான், இந்தியாவை தனது முக்கிய வளர்ச்சி சந்தையாக கருதி தொடர்ந்து முதலீடுகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வரிசையில், பிரதமர் மோடியுடனான சந்திப்புக்குப் பிறகு புதிய முதலீட்டு திட்டத்தை நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, 2026 முதல் 2030 வரையிலான காலகட்டத்தில் இந்தியாவில் தனது தொழில்களை விரிவுபடுத்துவதற்காக 48 பில்லியன் அமெரிக்க டாலர், அதாவது சுமார் ரூ.4.1 லட்சம் கோடி முதலீடு செய்ய அமேசான் முடிவு செய்துள்ளது.
இந்த முதலீட்டின் முக்கிய பகுதி செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் கிளவுட் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக ஒதுக்கப்பட உள்ளது. 2030-ஆம் ஆண்டுக்குள் கூடுதலாக 13 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்யப்படும் என அமேசான் தெரிவித்துள்ளது. இதன் மூலம் ஏஐ மற்றும் கிளவுட் கட்டமைப்பிற்கான மொத்த முதலீடு 21 பில்லியன் அமெரிக்க டாலரை தாண்டும்.
இந்த முதலீட்டின் மூலம் மும்பை மற்றும் ஐதராபாத் நகரங்களில் உள்ள அமேசானின் தரவு மையங்கள் விரிவுபடுத்தப்பட உள்ளன. அதே நேரத்தில் புதிய தொழில்நுட்ப உள்கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டு, இந்தியாவில் டிஜிட்டல் சேவைகள் மேலும் வலுப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செயற்கை நுண்ணறிவு, கிளவுட் கம்ப்யூட்டிங், இ-காமர்ஸ், ஸ்டார்ட்அப் ஆதரவு மற்றும் டிஜிட்டல் சேவைகள் போன்ற துறைகளில் இந்தியாவின் வேகமான வளர்ச்சி அமேசானை இந்த முதலீட்டு முடிவை எடுக்க தூண்டியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த சந்திப்பு குறித்து அமேசான் சிஇஓ ஆண்டி ஜாஸ்சி கூறுகையில், “பத்து ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் எங்கள் பயணத்தை தொடங்கினோம். அதன் பின்னர் இ-காமர்ஸ், கிளவுட் மற்றும் செயற்கை நுண்ணறிவு துறைகளில் வலுவான வளர்ச்சியை கண்டுள்ளோம். இந்திய வாடிக்கையாளர்கள், விற்பனையாளர்கள், டெவலப்பர்கள் மற்றும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு தொடர்ந்து சேவையளித்து வருகிறோம்” என்றார்.
மேலும், “அடுத்த ஐந்து ஆண்டுகளில் 48 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமாக முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளோம். வளர்ச்சியடைந்த மற்றும் தற்சார்பு இந்தியா என்ற பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வைக்கு ஆதரவளிக்கவும், இந்தியாவின் வளர்ச்சி பயணத்தில் நீண்டகால பங்குதாரராக செயல்படவும் உறுதிபூண்டுள்ளோம்” என்று தெரிவித்தார்.
அமேசான் நிறுவனத்தின் கணக்குப்படி, 2010 முதல் 2030 வரை இந்தியாவில் மேற்கொள்ளப்படும் மொத்த முதலீடு 88 பில்லியன் அமெரிக்க டாலரை தாண்டும். இதன்மூலம் இந்தியாவில் அதிக முதலீடு செய்யும் உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றாக அமேசான் திகழும்.
இந்த முதலீட்டு அறிவிப்பு இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரம், வேலைவாய்ப்பு உருவாக்கம், தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் செயற்கை நுண்ணறிவு துறைகளுக்கு புதிய ஊக்கத்தை வழங்கும் என பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.