சென்னை:
தமிழக முதல்-அமைச்சர் ச. ஜோசப் விஜய்யை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில தலைவர்கள் இன்று தலைமைச் செயலகத்தில் சந்தித்து பல்வேறு மக்கள் நலன் மற்றும் தொழிலாளர் நலன் சார்ந்த கோரிக்கைகளை முன்வைத்தனர். சுமார் 30 நிமிடங்கள் நடைபெற்ற இந்த சந்திப்பில் தொழிலாளர் பாதுகாப்பு முதல் மேகதாது அணை பிரச்சினை வரை பல முக்கிய விவகாரங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் மு. வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இடதுசாரி கட்சிகளின் பிரதிநிதிகள் இன்று காலை 11.30 மணியளவில் தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சரை நேரில் சந்தித்தனர்.
தொழிலாளர் நலன் குறித்து வலியுறுத்தல்
சந்திப்பின் போது மத்திய அரசு கொண்டு வந்துள்ள நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. இந்த சட்டங்கள் தொழிலாளர்களின் உரிமைகளை பாதிக்கக்கூடும் என்பதால் மாநில அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கம்யூனிஸ்ட் தலைவர்கள் வலியுறுத்தினர்.
மேலும் ஒப்பந்த ஊழியர்கள், அவுட்சோர்சிங் பணியாளர்கள் மற்றும் பல்வேறு துறைகளில் பாதுகாப்பற்ற சூழலில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு பணி நிரந்தரம் வழங்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
புலம்பெயர் தொழிலாளர்கள் பிரச்சினை
தமிழகத்தில் பணியாற்றி வரும் புலம்பெயர் தொழிலாளர்கள் சந்தித்து வரும் சிரமங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. அவர்களுக்கு அடிப்படை வசதிகள் மற்றும் சமூக பாதுகாப்பு திட்டங்கள் உறுதி செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
மத்திய அரசின் புதிய திட்டங்களால் மாநில அரசுக்கு ஏற்படக்கூடிய நிதிச்சுமை மற்றும் தொழிலாளர்களின் சட்டப்பூர்வ வேலைவாய்ப்பு உரிமைகள் பாதிக்கப்படும் அபாயம் குறித்தும் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
பெண்கள் பாதுகாப்பு மற்றும் சுற்றுலா வளர்ச்சி
பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான குற்றங்களை தடுக்க கூடுதல் நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய அவசியம் குறித்து இடதுசாரி தலைவர்கள் வலியுறுத்தினர். குறிப்பாக சிங்கப் பெண் சிறப்புப் படைக்கு மேம்பட்ட பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டது.
தமிழகம் முழுவதும் சுற்றுலா மையங்களை மேம்படுத்தி வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் திட்டங்களை அரசு முன்னெடுக்க வேண்டும் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டது.
மேகதாது அணை விவகாரம்
காவிரி நதிநீர் பிரச்சினையில் கர்நாடக அரசு முன்னெடுத்து வரும் மேகதாது அணை திட்டம் குறித்தும் சந்திப்பில் விவாதிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகளை இணைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
முதல்வர் விஜய் உறுதி
கம்யூனிஸ்டு தலைவர்கள் முன்வைத்த கோரிக்கைகளை கவனமாக கேட்டுக் கொண்ட முதல்-அமைச்சர் விஜய், மக்கள் நலன் சார்ந்த எந்த கோரிக்கையையும் எப்போது வேண்டுமானாலும் நேரடியாக கொண்டு வரலாம் என்று தெரிவித்ததாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும், “நமது ஆட்சியில் தேவையற்ற போராட்டங்கள் நடைபெறாத சூழல் உருவாகும். முன்வைக்கப்பட்ட கருத்துகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் அவர் உறுதியளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பின் போது அமைச்சர்கள் என். ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோரும் உடனிருந்தனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த நிர்வாகிகளும் சந்திப்பில் பங்கேற்றனர்.