சென்னை:
அ.தி.மு.க. மகளிரணி ஆலோசனைக் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கினார். அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி, பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மகளிரணி செயலாளர் பா.வளர்மதி ஏற்பாடு செய்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய அரசியல் மற்றும் சமூக விவகாரங்கள் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்களில் ஒன்று, பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் பாலியல் வன்கொடுமைகளை கடுமையாக ஒடுக்க வேண்டும் என்பதாகும். தமிழகத்தில் பெண்கள் மற்றும் சிறுமிகள் தொடர்ந்து பாலியல் குற்றங்களுக்கு ஆளாகும் சூழ்நிலை கவலை அளிப்பதாகக் குறிப்பிட்ட மகளிரணி, இதுபோன்ற குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கி ஒடுக்க தமிழக வெற்றிக் கழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியது.
மேலும், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வழிகாட்டுதலின்படி கட்சிப் பணிகளை தொடர்ந்து முன்னெடுத்து செல்லவும், எடப்பாடி பழனிசாமி தலைமையில் மக்கள் பணிகளிலும், கட்சி வளர்ச்சிப் பணிகளிலும் முழுமையாக ஈடுபடவும் மகளிரணி நிர்வாகிகள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பெற்ற வெற்றிக்கு எடப்பாடி பழனிசாமியின் பிரச்சாரப் பணிகள் முக்கிய காரணமாக இருந்ததாக கூட்டத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மாநிலம் முழுவதும் அவர் மேற்கொண்ட தேர்தல் பிரச்சாரப் பயணம் கட்சிக்கு புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியதாக தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கல்வித்துறையைப் பற்றியும் கூட்டத்தில் கவலை வெளியிடப்பட்டது. இந்த ஆண்டு பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகியும், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பல இடங்கள் காலியாக இருப்பதாக கூறப்பட்டது. தேர்வு முடிவுகள் மற்றும் மாணவர் சேர்க்கை நடைமுறைகள் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்றும், தவறுகள் இருந்தால் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதேபோல் மாநிலத்தில் நிலவும் மின்வெட்டு பிரச்சினை குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. புதிய அரசு பதவியேற்று சில வாரங்களே ஆகியுள்ள நிலையில் காரணங்கள் கூறாமல், மின்வெட்டுக்கு நிரந்தர தீர்வு காண போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மகளிரணி வலியுறுத்தியது.
இறுதியாக, அ.தி.மு.க. ஒரு தலைமுறைகளை கடந்த மக்கள் இயக்கம் என்றும், எந்த அரசியல் சூழ்நிலையாலும் அந்த இயக்கத்தை பலவீனப்படுத்த முடியாது என்றும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. கட்சியை மேலும் வலுப்படுத்த அனைத்து நிலை நிர்வாகிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.