அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல்: மெகா உள்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைக்க இந்த மாதமே பஞ்சாப் செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி!
பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த ஆண்டு (2027) தொடக்கத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அம்மாநிலத்தில் பல்வேறு பிரம்மாண்ட மத்திய அரசின் வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காகப் பிரதமர் நரேந்திர மோடி இந்த ஜூலை மாதமே பஞ்சாப்பிற்குப் பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்தத் தகவலை மத்திய ரயில்வே மற்றும் உணவு பதப்படுத்துதல் துறை இணை அமைச்சர் ரவ்னீத் சிங் பிட்டு அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.
வளர்ச்சித் திட்டங்களுடன் பிரதமர் விசிட்: இது தொடர்பாக மத்திய இணை அமைச்சர் ரவ்னீத் சிங் பிட்டு வெளியிட்டுள்ள முக்கிய அறிக்கையில், “பஞ்சாப் மாநிலத்தின் உள்கட்டமைப்பை மேம்படுத்தவும், மக்களின் பொது நலனை உறுதி செய்யவும் மத்திய பா.ஜ.க அரசு பல்வேறு முக்கிய முதலீடுகளைச் செய்து வருகிறது. அந்த வகையில், பெரிய அளவிலான பல்வேறு உள்கட்டமைப்பு மற்றும் ரயில்வே துறை சார்ந்த புதிய வளர்ச்சித் திட்டப்பணிகளைத் தொடங்கி வைப்பதற்காகப் பிரதமர் நரேந்திர மோடி இந்த மாதமே பஞ்சாப்பிற்குப் நேரில் பயணம் செய்ய உள்ளார்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பஞ்சாப்பின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்குத் தேவையான நிதிப் பகிர்வில் எந்தவித பற்றாக்குறையும் ஏற்படாத வண்ணம் மத்திய அரசு தொடர்ந்து நிதி ஒதுக்கீடுகளை உறுதி செய்து வருவதாகவும், மாநிலத்தின் இணைப்பு (Connectivity) மற்றும் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதில் பிரதமர் மோடி தனி கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் தனது அறிக்கையில் பெருமிதத்துடன் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேர்தல் களத்தில் தனித்துப் போட்டி: தற்போது பஞ்சாப்பில் முதலமைச்சர் பகவந்த் மான் தலைமையில் ஆம் ஆத்மி கட்சி (AAP) ஆட்சி செய்து வருகிறது. அடுத்த ஆண்டு அங்கு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால், ஆளும் ஆம் ஆத்மி, எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க ஆகிய கட்சிகள் இப்போதே தேர்தல் வேலைகளைத் தீவிரமாகத் தொடங்கியுள்ளன.
கடந்த காலங்களைப் போலல்லாமல், இந்த முறை பஞ்சாப் சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி (BJP) எந்தக் கட்சியுடனும் கூட்டணி வைக்காமல், தனித்து களம் காண முடிவு செய்துள்ளது. “சட்டமன்றத் தேர்தலைத் தனித்து எதிர்கொள்ள பா.ஜ.க முழு அளவில் தயாராக உள்ளது. அதற்கான வியூகங்களை வகுத்து, தேர்தல் களத்தில் தடம் பதிக்கக் கட்சித் தொண்டர்கள் இப்போதே தீவிரமாக உழைக்கத் தொடங்கிவிட்டனர்” என்று ரவ்னீத் சிங் பிட்டு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
பா.ஜ.க-வினர் மத்தியில் புதிய புத்துணர்ச்சி: சமீபத்தில் அகில இந்திய பா.ஜ.க தேசியத் தலைவர் நிதின் நபின் (Nitin Nabin) பஞ்சாப்பிற்கு அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொண்டு, அங்குள்ள லுதியானா உள்ளிட்ட பகுதிகளில் கட்சி நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனைக் கூட்டங்களை நடத்தினார். இதனைத் தனது அறிக்கையில் நினைவு கூர்ந்த அமைச்சர் பிட்டு, “பா.ஜ.க தேசியத் தலைவரின் பஞ்சாப் வருகையானது, ஒட்டுமொத்த மாநில பா.ஜ.க நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் மிகப்பெரிய அளவில் புத்துணர்ச்சியையும், புதிய உத்வேகத்தையும் கொடுத்துள்ளது. புதிய ஆர்வத்துடன் அனைவரும் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகிறோம்” என்றார்.
பஞ்சாப்பில் பாரம்பரியமாக நகர்ப்புறங்களில் மட்டுமே பலமாக இருந்த பா.ஜ.க, தற்போது சீக்கிய சமூகத்தின் முக்கிய முகமான ரவ்னீத் சிங் பிட்டு போன்ற தலைவர்களை முன்னிறுத்தி கிராமப்புறங்களிலும் தனது செல்வாக்கை நிலைநாட்ட முயன்று வருகிறது. இந்தச் சூழ்நிலையில், இந்த மாதத்தில் அமையவுள்ள பிரதமரின் பஞ்சாப் வருகை மற்றும் ரயில்வே திட்டங்களின் அறிவிப்புகள், அம்மாநில அரசியலில் மிக முக்கியத் திருப்புமுனையாகவும், பா.ஜ.க-வின் தேர்தல் பிரச்சாரத் தொடக்கமாகவும் அமையும் என்று அரசியல் நோக்கர்களால் பார்க்கப்படுகிறது.