பி.எப் விதிகளில் வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றம்: 100 சதவீதம் வரை முன்பணம் எடுக்க அனுமதி – 8 கோடி ஊழியர்களுக்கு EPFO-வின் அதிரடி சலுகை!

இந்தியாவில் உள்ள சுமார் 8 கோடிக்கும் அதிகமான அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்குப் பெரும் பயனளிக்கும் வகையில், ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) தனது முக்கிய விதிமுறைகளில் அதிரடியான மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. இதன்படி, ஊழியர்கள் தங்களது பி.எப் கணக்கில் உள்ள தகுதியான இருப்புத் தொகையில் இருந்து 100 சதவீதம் வரை முன்பணமாகப் பெற்றுக் கொள்ளப் புதிய விதிகள் வழிவகை செய்துள்ளன.

கட்டாய பி.எப் பிடித்தம் ரூ.1,800 மட்டுமே: புதிய விதிமுறைகளின்படி, பி.எப் கணக்கிற்கான அடிப்படை சம்பள வரம்பில் முக்கிய சீர்திருத்தம் செய்யப்பட்டுள்ளது. மாதம் ரூ.15,000 வரை அடிப்படை ஊதியம் (Basic Salary) பெறும் ஊழியர்களுக்கு மட்டுமே 12 சதவீத பி.எப் பங்களிப்பு இனி கட்டாயமாக்கப்படும். அதன்படி, ஊழியரும் அவர் பணிபுரியும் நிறுவனமும் தலா அதிகபட்சமாக ரூ.1,800 மட்டுமே மாதந்தோறும் கட்டாயமாகச் செலுத்த வேண்டும்.

இந்த ரூ.15,000 வரம்பிற்கு மேல் சம்பளம் வாங்கும் ஊழியர்களுக்கு, அதற்கு மேல் பிடித்தம் செய்யப்படும் தொகை ‘விருப்பப் பங்களிப்பாக’ (Voluntary Contribution) கருதப்படும். உதாரணமாக, ஒரு ஊழியரின் அடிப்படைச் சம்பளம் ரூ.1 லட்சமாக இருந்தாலும், அவருடைய கட்டாய மாத பி.எப் பிடித்தம் வெறும் ரூ.1,800 ஆக மட்டுமே இருக்கும். தங்களது ஓய்வூதியச் சேமிப்பை மேலும் அதிகரிக்க விரும்பும் ஊழியர்கள், தாங்களாகவே முன்வந்து விருப்பத்தின் பேரில் கூடுதல் தொகையை பி.எப் கணக்கில் செலுத்திக் கொள்ளலாம். நிறுவனங்களும் தங்களுக்கு இணையான பங்களிப்பை வழங்கலாம்; ஆனால், அது கட்டாயமல்ல.

நெகிழ்வுத்தன்மை கொண்ட புதிய முறை: இந்த புதிய விதியின் மூலம் ஊழியர்களுக்குப் பணப்புழக்கம் அதிகரிக்கும். ஊழியரோ அல்லது நிறுவனமோ தங்களது விருப்பப் பங்களிப்பை (Voluntary Contribution) எப்போது வேண்டுமானாலும் குறைத்துக் கொள்ளவோ அல்லது முழுமையாக நிறுத்திக் கொள்ளவோ முடியும். இதன் மூலம், மாத சம்பளதாரர்கள் தங்களின் தற்போதைய நிதித் தேவைகள் மற்றும் எதிர்கால ஓய்வூதியச் சேமிப்பைத் தங்களுக்குத் தகுந்தாற்போல் மிகவும் நெகிழ்வுத்தன்மையுடன் திட்டமிட்டு நிர்வகிக்க முடியும் என்று பி.எப் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

100 சதவீதம் வரை முன்பணம் எடுக்கலாம்: இவற்றுக்கெல்லாம் மேலாக, பி.எப் கணக்கில் இருந்து அவசரத் தேவைகளுக்காக முன்பணம் (PF Advance) எடுக்கும் விதிகளில் இமாலய தளர்வுகள் செய்யப்பட்டுள்ளன. ஒரு ஊழியர் ஓராண்டில் பி.எப் கணக்கில் இருந்து முன்பணம் எடுக்கும் வாய்ப்புகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும், தகுதியான இருப்புத் தொகையில் 100 சதவீதம் வரை முன்பணமாகப் பெறப் புதிய விதிகளில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தொகையில் ஊழியர் செலுத்திய பங்களிப்பு மற்றும் நிறுவனம் செலுத்திய பங்களிப்பு ஆகிய இரண்டுமே அடங்கும். அதே வேளையில், ஊழியர்களின் எதிர்காலப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, உறுப்பினர்கள் தங்களது பி.எப் கணக்கில் உள்ள மொத்த இருப்புத் தொகையில் குறைந்தபட்சம் 25 சதவீதத் தொகையை எப்போதுமே கணக்கில் வைத்திருக்க வேண்டும் என்ற முக்கிய நிபந்தனையும் இதில் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அதிரடி மாற்றங்கள் நடுத்தரக் குடும்பத்து ஊழியர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.