சென்னை: சென்னை மாநகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டுப் பொலிவுடன் திகழ்ந்த கோயம்பேடு பேருந்து நிலையம், தற்போது உரிய பராமரிப்பின்றிச் சீரழிந்து சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவிட்டதாகக் குற்றம் சாட்டியுள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அதனை உடனடியாகப் போர்க்கால அடிப்படையில் புனரமைத்து மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
கோயம்பேடு பேருந்து நிலையத்தின் வரலாற்றுப் பின்னணி: சென்னை பாரிஸ் கார்னர் மற்றும் கொத்தவால்சாவடி பகுதிகளில் இருந்த கடுமையான போக்குவரத்து மற்றும் மக்கள் நெருக்கடியைக் குறைப்பதற்காக, கடந்த 2002-ம் ஆண்டில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசால் சுமார் 35 ஏக்கர் பரப்பளவில் ரூ.103 கோடி மதிப்பீட்டில் கோயம்பேடு பிரம்மாண்டமான பேருந்து நிலையம் உருவாக்கப்பட்டது. ஒரே நேரத்தில் 300 பேருந்துகளை நிறுத்தும் வசதியுடன் அமைக்கப்பட்ட இப்பேருந்து நிலையம் மூலமாக நாளொன்றுக்கு சராசரியாக ஒரு லட்சத்திற்கும் அதிகமான பயணிகள் பயனடைந்து வந்தனர்.
பின்னர் 2015-ல் மெட்ரோ ரெயில் சேவையும் இணைக்கப்பட்டதால் பொதுமக்களுக்குப் போக்குவரத்து மிகவும் எளிதானது. இதனையடுத்து, சென்னையின் நெரிசலை மேலும் சீரமைக்க எனது தலைமையிலான ஆட்சிக்காலத்தில் கிளாம்பாக்கம் புறநகர் பேருந்து நிலையத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இதன்படி, தென் மாவட்டங்களுக்குக் கிளாம்பாக்கத்திலிருந்தும், மேற்கு மற்றும் வட மாவட்டங்களுக்குக் கோயம்பேட்டிலிருந்தும், ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு மாதவரத்திலிருந்தும் பேருந்துகளை இயக்குவது எனத் திட்டமிடப்பட்டுச் சிறப்பாகச் செயல்பட்டு வந்தது.
திட்டங்களின் சிதைவும் சீரழிவும்: ஆனால், கடந்த 2021-ல் பொறுப்புக்கு வந்த அரசு இந்தத் திட்டங்களைச் சரியாகக் கையாளாமல் முடக்கியதுடன், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை அவசர கதியில் திறந்ததன் மூலம் சென்னை மக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகப் பெரும் அவதிக்குள்ளாகினர். இதனால் கோயம்பேடு பேருந்து நிலையம் தனது பொலிவை இழந்து முற்றிலும் செயலிழந்தது.
அதுமட்டுமின்றி, கோயம்பேடு பேருந்து நிலையம் அமைந்துள்ள மதிப்புமிக்க நிலத்தைத் தனியார் நிறுவனத்திற்குத் தாரைவார்க்க முயன்றபோது அதிமுக சார்பில் கடும் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டன. மக்களின் எதிர்ப்புக்குப் பயந்து அந்த முயற்சி கைவிடப்பட்டாலும், வேண்டுமென்றே கோயம்பேடு வளாகத்தைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டதால் அது கேட்பாரற்றுச் சீர்குலைந்துவிட்டது.
சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிய கோயம்பேடு: தற்போது கோயம்பேடு பேருந்து வளாகம் முழுவதும் போதிய மின் விளக்கு வசதிகள் இன்றியும், சாலைகள் பழுடைந்தும் காணப்படுகின்றன. இரவு நேரங்களில் இப்பகுதியில் மது அருந்துதல் மற்றும் சட்டவிரோதப் பாலியல் தொழில்களில் சமூக விரோதிகள் ஈடுபடுவதாகத் தொடர்ச்சியாகப் புகார்கள் எழுந்து வருகின்றன. புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையிலும், காவல்துறையினர் இத்தகைய சட்டவிரோதச் செயல்களைத் தடுத்து நிறுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
முந்தைய திமுக ஆட்சியைப் போலவே தற்போதைய தவெக ஆட்சியிலும் கோயம்பேடு பேருந்து வளாகத்தை வெளிமாநிலக் கட்டுமான நிறுவனத்திடம் ஒப்படைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வருவதாகவும், அப்படி ஒரு திட்டம் இருந்தால் அரசு உடனடியாக அதைக் கைவிட வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி எச்சரித்துள்ளார்.
அதிமுகவின் முக்கிய கோரிக்கைகள்:
-
கோயம்பேடு பேருந்து நிலைய வளாகத்தைப் போர்க்கால அடிப்படையில் முழுமையாகப் புனரமைக்க வேண்டும்.
-
அதிமுக ஆட்சியில் திட்டமிடப்பட்டதைப் போலவே, மேற்கு மற்றும் வட மாவட்டங்களுக்குச் செல்லக்கூடிய விரைவுப் பேருந்துகளையும், மாநகரப் பேருந்துகளையும் கோயம்பேட்டிலிருந்து மீண்டும் இயக்க வேண்டும்.
-
வளாகத்தில் நிலவும் சட்டவிரோதச் செயல்களைக் கட்டுப்படுத்தக் காவல்துறை உரிய கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.