விவசாயிகளுக்கு 18 மணி நேர இலவச மும்முனை மின்சாரம் தொடரும்: பரவிய வதந்திக்கு தமிழ்நாடு மின்சார வாரியம் முற்றுப்புள்ளி!
சென்னை: தமிழ்நாட்டில் விவசாயப் பம்ப் செட்டுகளுக்கு நாளொன்றுக்கு வழக்கம்போல 18 மணி நேர இலவச மும்முனை மின்சாரம் தொடர்ந்து வழங்கப்பட்டு வருவதாகவும், இதில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை என்றும் தமிழ்நாடு மின்சார வாரியம் (TNPDCL) அதிகாரப்பூர்வமாகத் தெளிவுபடுத்தியுள்ளது.
சமீபத்தில் ஆங்கில நாளிதழ் ஒன்றில், “நிலத்தடி நீர் மட்டம் குறைவு மற்றும் 18 மணி நேர இலவச மின்சாரக் குறைப்பால் டெல்டா விவசாயிகள் பாதிப்பு” என்ற தலைப்பில் செய்தி ஒன்று வெளியானது. அந்தச் செய்தியில், விவசாயிகளுக்கான 18 மணி நேர இலவச மின் விநியோகம் இனிமேல் 14 மணி நேரமாகக் குறைக்கப்பட உள்ளதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தச் செய்தி விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியது.
இந்நிலையில், இந்தத் தவறான தகவலுக்கு விளக்கம் அளித்து தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் (TNPDCL) சார்பில் செய்திக்குறிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
“தமிழக விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, விவசாயப் பம்ப் செட்டுகளுக்கு நாளொன்றுக்கு 18 மணி நேர இலவச மும்முனை மின்சாரம் தொடர்ந்து தடையின்றி வழங்கப்பட்டு வருகிறது. மின்சாரக் குறைப்பு தொடர்பாக நாளிதழில் வெளியான தகவல் முற்றிலும் உண்மையற்றது.”
மேலும், மின்சார விநியோகத்தில் ஏற்படும் தற்காலிகத் தடைகள் குறித்து விளக்கம் அளித்துள்ள மின்சார வாரியம்:
“மின்சாரக் கட்டமைப்பில் எதிர்பாராமல் ஏற்படும் தொழில்நுட்பக் கோளாறுகள், அவசரப் பராமரிப்புப் பணிகள் மற்றும் சீரமைப்பு நடவடிக்கைகளின் போது மட்டுமே ஒரு சில மணி நேரங்களுக்குத் தற்காலிகமாக மின் தடை ஏற்பட வாய்ப்புள்ளது. இத்தகைய தவிர்க்க முடியாத தொழில்நுட்ப இடையூறுகளைத் தவிர, விவசாயிகளுக்கு வழங்கப்படும் 18 மணி நேர இலவச மின்சார நடைமுறையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இது தொடர்பாக எந்தவொரு புதிய உத்தரவையும் தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் பிறப்பிக்கவில்லை என்பதும் இதன் மூலம் உறுதிப்படுத்தப்படுகிறது.”
எனவே, விவசாயிகள் இது போன்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும், அரசு அறிவித்தபடி 18 மணி நேர இலவச மும்முனை மின்சார சேவை தடையின்றித் தொடரும் என்றும் மின்சார வாரியம் உறுதியளித்துள்ளது.