‘கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகும் வரை பேச்சுவார்த்தை கிடையாது’: நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி அதிரடி அறிவிப்பு!

புதுடெல்லி: நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள ‘நீட்’ வினாத்தாள் கசிவு விவகாரம் மற்றும் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாக ராஜினாமா செய்ய வலியுறுத்தி, எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக கடந்த 4 நாட்களாக அவை நடவடிக்கைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன.

இன்று காலை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் தலைமையில் ‘இந்தியா’ கூட்டணி எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் ஒன்றுதிரண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து அவை கூடியபோதும் எதிர்க்கட்சிகளின் கடும் அமளி தொடர்ந்ததால், பிற்பகல் 2 மணி வரை அவையை ஒத்திவைத்து சபாநாயகர் உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அரசு மற்றும் சபாநாயகரின் செயல்பாடுகள் குறித்து கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது:

“நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, மக்களவையில் காங்கிரஸ் எம்பிக்களிடம் விவாதத்தைத் தொடங்குமாறு கேட்டுக் கொண்டார். ஒருவரது பெயர் குறிப்பிடப்படும் போது, அவர் அதற்குப் பதிலளிக்குமாறு கோருவது நாடாளுமன்ற மரபு. ஆனால், கிரண் ரிஜிஜுவின் கருத்துக்குப் பதிலளிக்க நான் எழுந்தபோது, எனக்குப் பேச அனுமதி மறுக்கப்பட்டது. எனது மைக் உடனடியாக அணைக்கப்பட்டது.”

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களின் கோரிக்கைகளை அரசுக்கு நினைவூட்டிய ராகுல் காந்தி, எதிர்க்கட்சிகளின் 3 முக்கிய நிபந்தனைகளைத் தெளிவுபடுத்தினார்:

  1. ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும்.

  2. அமைதியான முறையில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

  3. பாதிக்கப்பட்ட மாணவர்களிடம் பிரதமர் நரேந்திர மோடி நேரடியாக மன்னிப்பு கேட்க வேண்டும்.

“இந்த 3 நிபந்தனைகளும் நிறைவேற்றப்பட்டு, தர்மேந்திர பிரதான் தன் பதவியை ராஜினாமா செய்யும் வரை, மத்திய அரசுடன் நாங்கள் எந்தவொரு பேச்சுவார்த்தையிலோ அல்லது அவையின் விவாதத்திலோ ஈடுபடப் போவதில்லை” என்று ராகுல் காந்தி திட்டவட்டமாகத் தெரிவித்தார்.