‘போதைப் பொருள் இல்லா தமிழகம்’ என்று மேடைகளில் வெறும் உறுதிமொழி மட்டும் எடுத்துக்கொள்வது போதாது என்றும், தீவிர பிரச்சாரங்கள் மற்றும் கடும் நடவடிக்கைகள் மூலமே இதற்கு தீர்வு காண முடியும் என்றும் பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் போதைப்பொருள் புழக்கத்தை முற்றிலுமாக ஒழிக்கும் நோக்கில், முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் இன்று ‘போதைப் பொருட்கள் இல்லா தமிழகம்’ என்ற விழிப்புணர்வு இயக்கத்தை முறைப்படி தொடங்கி வைத்தார். இந்த இயக்கம் தொடங்கப்பட்ட முதல் நாளே, கோவையில் நடந்துள்ள ஒரு அதிர்ச்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் 19 வயது மதிக்கத்தக்க பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் என்பவர், போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையான 20 பேர் கொண்ட கும்பலால் கொடூரமாகத் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். இந்தச் செய்தி மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, கல்லூரிகளில் நடக்கும் போதைப்பொருள் விற்பனை மற்றும் பயன்பாடு குறித்து மாணவர் அமுதன் புகார் அளித்ததே இந்தத் தாக்குதலுக்கும் கொலைக்கும் காரணம் என்று அவரது குடும்பத்தினர் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளனர். இந்த மரணம் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் குற்றச்சாட்டு மேலும் பல அதிர்ச்சிகளைத் தருகிறது.

தமிழகத்தின் எதிர்கால தூண்களாக இருக்க வேண்டிய இளைஞர்களும், குறிப்பாக கல்லூரி மாணவர்களும் இதுபோன்று போதைப்பொருள் பிடியில் தொடர்ந்து சிக்குவது கவலை அளிக்கிறது. அவர்கள் தங்களது சொந்த எதிர்காலத்தை பாழாக்கிக் கொள்வதோடு மட்டுமின்றி, சமூக விரோதிகளாகவும் மாறிவருவது போதைப்பொருள் கலாச்சாரத்தின் கொடிய முகத்தை வெளிப்படுத்துகிறது என்று வானதி சீனிவாசன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இயக்கம் தொடங்கிய முதல் நாளே இத்தகைய ஒரு கொடூர சம்பவம் அரங்கேறியிருப்பது, அரசின் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் அமலாக்கப் பிரிவின் செயல்பாடு குறித்து பல கேள்விகளை எழுப்புகிறது. எனவே, தமிழக அரசு இனியும் தாமதிக்காமல் உடனடியாக விழித்துக்கொண்டு களத்தில் இறங்க வேண்டும். போதைப்பொருள் பயன்பாடு மற்றும் கடத்தல் குறித்த தகவல்களை தைரியமாக புகார் அளிப்பவர்களுக்கு உரிய பாதுகாப்பை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என்றும் வானதி சீனிவாசன் தனது அறிக்கையில் தீவிரமாக வலியுறுத்தியுள்ளார்.