அரசுப் பேருந்து நடத்துனர்கள் நியமன ஒப்பந்தம்: உத்தரப் பிரதேச நிறுவனத்திற்கு அனுமதி அளித்த தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகங்களில் நிலவி வரும் பல்லாயிரக்கணக்கான காலிப்பணியிடங்களை நிரப்பக் கோரி பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் சூழலில், நடத்துனர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனத்திற்கு டெண்டர் வழங்கப்பட்டுள்ள விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
போக்குவரத்துத் துறையும் சேவையும்: அரசுப் போக்குவரத்து கழகங்கள் பொதுமக்களின் அன்றாடப் பயணத் தேவைகளை நிறைவேற்றும் மிகமுக்கியமான சேவை நிறுவனங்களாகும். தமிழ்நாட்டில் நாள்தோறும் சுமார் 2 கோடிக்கும் அதிகமானோர் அரசுப் பேருந்துகளில் பயணம் செய்கின்றனர். மக்களுக்குப் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வதே இத்துறையின் முதன்மைக் கடமையாகும். கடந்த 50 ஆண்டுகளாகத் தேவையான பணியாளர்களை முறையாகத் தேர்வு செய்து, உரிய பயிற்சி அளித்துச் சிறப்பான சேவையை இத்துறையினர் வழங்கி வந்துள்ளனர்.
ஆனால், கடந்த காலங்களில் காலிப்பணியிடங்களில் ஒப்பந்தத் தொழிலாளர்களை நியமிக்கும் முறைகள் கொண்டுவரப்பட்டபோது, அதற்கு எதிராக சிஐடியு சார்பில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. ஒப்பந்த முறை இடஒதுக்கீட்டுக்கு எதிரானது மற்றும் பாதுகாப்பான பயணத்திற்கு உகந்தது அல்ல என்ற வாதங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், நீதிமன்ற வழக்குகளும் மேல்முறையீடுகளும் தொடர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
உத்தரப் பிரதேச நிறுவனத்திற்கு டெண்டர்: தற்போது தவெக அரசு “எஸ்.எஸ். எண்டர்பிரைசஸ்” என்ற உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த நிறுவனத்திற்குத் டெண்டர் மூலம் நடத்துனர்களை நியமிக்க முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. லட்சக்கணக்கான தமிழ்நாட்டு இளைஞர்கள் அரசு வேலைவாய்ப்புக்காக நீண்ட காலமாகக் காத்திருக்கும் நிலையில், அவர்களுக்குரிய வாய்ப்பைப் பறித்துவிட்டு வெளிமாநில நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்குவது கடும் கண்டனத்திற்குரியது என்று சிபிஎம் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த முறையால் தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலைவாய்ப்பு உரிமைகள் பாதிக்கப்படுவதோடு, இடஒதுக்கீட்டுக் கொள்கையும் கேள்விக்குறியாகும் அபாயம் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோரிக்கைகள்: இந்த விவகாரம் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் விவரிக்கப்பட்டுள்ள முக்கிய வலியுறுத்தல்கள்:
-
மாநகரப் போக்குவரத்து கழகத்தில் வெளி முகமை (Outsourcing) மூலம் நடத்துனர்களை நியமிக்க உத்தரப் பிரதேச நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ள ஆணையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
-
‘சிந்தூரி மேனேஜ்மெண்ட் சொல்யூசன்ஸ்’ என்ற நிறுவனத்திற்கு நிர்வாகப் பணியாளர்கள் 250 பேரை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க வழங்கப்பட்டுள்ள ஆணையையும் திரும்பப் பெற வேண்டும்.
-
போக்குவரத்துத் துறையில் காலியாக உள்ள பல்லாயிரக்கணக்கான பணியிடங்களை எவ்விதத் தாமதமும் இன்றி நிரந்தரமான முறையில் நிரப்பிடத் தேவையான நடவடிக்கைகளைத் தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.