சேலம்:
“திமுக அரசுக்கு எதிராக விவசாயிகள் கொந்தளிப்பில் உள்ளனர்; அதனால் தான் முதல்வர் என்னை குற்றம் சாட்டுகிறார்” என அதிமுக பொதுச்செயலாளர் இடப்பாடி பழனிசாமி (இபிஎஸ்) தெரிவித்துள்ளார்.
சேலம் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:
டிஜிபி நியமனம் – திமுக அரசுக்கு தடுமாற்றம்
“நிரந்தர டிஜிபி நியமனத்தில் திமுக அரசு ஏன் தடுமாறுகிறது? இதுவரை நிரந்தர டிஜிபி நியமனம் செய்யப்படவில்லை. எனக்கு அருகதை இல்லை என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறுகிறார். எனக்கு அருகதை உறுதியாக உள்ளது. உங்களுக்கு இருக்கிறதா எனத் தெரியவில்லை.
டிஜிபி நியமனம் செய்ய அரசு தான் பட்டியல் அனுப்ப வேண்டும். பட்டியலில் உள்ள மூவரும் தமிழக அரசின் ‘கைப்பாவை’ ஆக செயல்படமாட்டார்கள் என்பதால்தான் நிரந்தர டிஜிபி நியமனம் தாமதமாகிறது.”
உண்மை சொல்வது அவசியம்
“சட்டத்துறை அமைச்சர் தவறான தகவல்களை கூறுவது வெட்கக்கேடானது. இப்படிப்பட்டவர்கள் அமைச்சர்களாக இருந்தால் நாடு எப்படி முன்னேறும்? மக்களுக்கு உண்மையை சொல்ல வேண்டும்; மக்களுக்கு ஒன்றும் தெரியாது என நினைக்கக் கூடாது.”
விவசாயிகள் மீது திமுக அரசின் அலட்சியம்
“நெல் கொள்முதல் விஷயத்தில் திமுக அரசு மிகுந்த அலட்சியமாக நடந்து கொள்வதால் விவசாயிகள் மிகுந்த துன்பம் அனுபவிக்கிறார்கள்.
காவிரி படுகை பகுதியில் 6 லட்சம் ஏக்கரில் குறுவை பயிரிடப்பட்டுள்ளது.
முன்கூட்டியே அறுவடை செய்திருந்தால் நெல் மழையில் நனைந்திருக்காது.
கொள்முதல் மையங்களில் பணியாளர் பற்றாக்குறை, போக்குவரத்து சிக்கல்கள் உள்ளன.
திமுக ஆட்சிக்கு வந்த 4 ஆண்டுகளில் குறுவை விவசாயிகள் பயிர்க்காப்பீட்டில் சேர்க்கப்படவில்லை. விவசாயிகளுக்கு எதிராக செயல்படும் அரசு திமுக அரசு. விவசாயிகள் தரும் கண்ணீர் தெரியாமல் சினிமா பார்க்கச் செல்கிறார் முதல்வர்.”
“நான் விவசாயி – அதைத்தான் தொழிலாக செய்கிறேன்”
“என்னை பச்சை துண்டு போட்ட விவசாயி என ஸ்டாலின் விமர்சிக்கிறார். நான் விவசாயி என்பது அனைவருக்கும் தெரியும். எம்.எல்.ஏ ஆன நாள் முதல் விவசாயம் செய்து வருகிறேன். மறைக்கவில்லை; அதுவே எனது தொழில்.”
“டெல்டாவை பாலைவனமாக்க முயன்றது திமுக அரசு”
“விவசாயிகளுக்கு துரோகம் செய்தது திமுக அரசு. டெல்டா மாவட்டங்களை பாலைவனமாக்க முயற்சித்தவர் ஸ்டாலின். விவசாயிகள் அரசு மீது கோபமாக உள்ளார்கள் என்பதால் தான் அவர் என்னை விமர்சிக்கிறார்.”
மத்திய அரசின் மறுப்பு குறித்து முதல்வர் சொல்லவில்லை
“நெல் ஈரப்பதத்தை 22% ஆக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசு ஏன் நிராகரித்தது என்று முதல்வர் சொல்லவில்லை. காரணத்தை சொல்ல வேண்டும்.
3 வேளாண் சட்டங்கள் குறித்து முதல்வர் ஸ்டாலினுக்கு தெரியாது. அவர் சொல்லட்டும்; நான் விவரமாக சொல்கிறேன். தமிழக விவசாயிகள் எவ்வாறு பாதிக்கப்படுவார்கள் என்ற விவரத்தை அவர் கூற வேண்டும்.”
எதிர்க்கட்சியின் கடமை
“அதிமுக ஆட்சியில் விவசாயிகள் பாதிக்கப்படவில்லை. எதிர்க்கட்சியாக நாங்கள் மக்களின் கோரிக்கைகளை போராடி பெற்றுத் தருகிறோம்.
காவிரி பிரச்சினையில் அதிமுக எம்.பிக்கள் பார்லிமெண்ட் முடக்கியனர். நீட் பிரச்சினை குறித்து திமுக பேசினார்கள்; ஆனால் பார்லிமெண்டில் பேசினார்கள்? பேசினால் உங்கள் ஊழல்கள் வெளிவந்து விடும் என்ற பயம்.
39 எம்.பிக்களை வைத்திருக்கும் திமுக, மக்களுக்கு என்ன பயன் செய்து இருக்கிறது?”
வாக்காளர் பட்டியல் முறைகேடு – திமுக பொறுப்பு
“ஓ.பன்னீர்செல்வம் பிரச்சினை முடிந்த ஒன்று. அதை மீண்டும் மீண்டும் பேசுவது அரைத்த மாவை மீண்டும் அரைப்பது போல.
எஸ்ஐஆர் பணியில் முறைகேடு நடக்கிறது. திமுகவினர் வீடு வீடாகச் சென்று படிவங்கள் சேகரிக்கின்றனர். அடுக்குமாடி குடியிருப்புகளில் கையொப்பம் வைத்து படிவங்கள் எடுத்துக் கெள்கிறார்கள். நாம் இதுகுறித்து தலைமை தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளோம். இந்த முறைகேடுகளைத் தடுக்க வேண்டும்.”

