சென்னை:

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். ஆட்சிக்கு வந்ததிலிருந்து திமுகவினர் மற்றும் அவர்களுடன் இணைந்த சமூக விரோதிகள், “அதிகாரத்தின் மமதையில் பேயாட்டம் போடுகிறார்கள்” என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில், “2021ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, தங்களை சட்டத்திற்கு மேல் எனக் கருதும் சில ஆளுங்கட்சி ஆதரவாளர்கள், அடாவடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு சட்டத்தின் பயமே இல்லை. வரும் தேர்தலில் மக்கள் இவர்களுக்கு உரிய பாடம் புகட்டுவார்கள்,” என்று பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்த இரண்டு சம்பவங்களைக் குறிப்பிட்ட அவர், “ஓசூரில் அரசு ஊழியரான சிவமூர்த்தி மீது கார் ஏற்றி கொன்றதாகக் கூறப்படும் ஆதித்யாவின் தந்தை சீனிவாசன் திமுக மேற்கு மாவட்ட பொதுக்குழு உறுப்பினர். அதேபோல் காவேரிபட்டினத்தில் நடைபெற்ற மகா சிவராத்திரி விழாவில் திமுக ஒன்றிய செயலர் மகேந்திரனின் மகன் ஆகாஷ் மற்றும் அவரது நண்பர்கள் தாக்கியதில் 15 பேர் காயமடைந்தனர். இதுபோன்ற பல சம்பவங்கள் தமிழகம் முழுவதும் நடைபெறுகின்றன,” என்றார்.

அவர் மேலும் கூறியதாவது: “இந்தச் சம்பவங்களில் திமுக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் முதல்வர் ஸ்டாலின், ‘தமிழகத்துக்கும் டில்லிக்கும் போர்’ எனப் பேசிக் கொண்டு பிரச்னையை மாற்றி விட முயற்சி செய்கிறார்,” என்று குற்றம்சாட்டினார்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே பிளஸ் ஒன் மாணவன் மீது சக மாணவர்கள் சாதி வெறியில் தாக்கிய சம்பவத்தையும் அவர் கண்டித்தார். “இச்சம்பவம் நடந்தே நான்கு நாட்கள் ஆகிவிட்டன. ஆனால் திமுக அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாணவர்கள் இடையே சாதி வெறி வளர்வதற்கான காரணம் என்ன? முதல்வர் இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும்,” என்று பழனிசாமி வலியுறுத்தினார்.

“மக்களின் பிரச்சனைகளை புறக்கணித்து, விளம்பரப் பிரசாரத்தில் மட்டுமே ஈடுபடும் முதல்வர் ஸ்டாலின், சமூக அநீதிகளைப் பற்றிய உண்மைகளை எப்போது பேசப் போகிறார்?” எனக் கேள்வி எழுப்பி தனது அறிக்கையை அவர் நிறைவு செய்தார்.