திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடந்துள்ள ஒரு கல்வி முறைகேடு மற்றும் சமூகநீதிப் புறக்கணிப்பு விவகாரம் தமிழக கல்வி வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 2026–2027-ஆம் கல்வியாண்டிற்கான ‘மருத்துவ இயற்பியல்’ (M.Sc. Medical Physics) முதுகலைப் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ளது. இந்தச் சேர்க்கையின் போது, பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கான (BCM) உரிய 3.5 சதவீத சமூகநீதி உள் இடஒதுக்கீடு முற்றிலுமாக மறுக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிப்பதாக எஸ்.டி.பி.ஐ. கட்சி பகிரங்கமாகக் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள கண்டன அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:- மொத்தம் 11 இடங்கள் கொண்ட இந்தப் பாடப்பிரிவில், 1 சதவீத இடஒதுக்கீடு கொண்ட பழங்குடியினர் (ST) மற்றும் 3 சதவீத உள் இடஒதுக்கீடு கொண்ட அருந்ததியர் (SCA) பிரிவினருக்கு 200-புள்ளி சுழற்சி முறைப்படி (200-Point Roster System) உரிய இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால், அதேவேளையில் 3.5 சதவீத இடஒதுக்கீடு கொண்ட பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் (BCM) பிரிவைச் சேர்ந்த தகுதியான மாணவருக்கு மட்டும் சட்டப்பூர்வமான இடம் திட்டமிட்டு மறுக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கமும் (AUT), பாதிக்கப்பட்ட மாணவரும் இந்தத் தவறை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ள போதிலும், இடஒதுக்கீட்டு விதிகள் முறையாகத்தான் பின்பற்றப்பட்டன என்று பல்கலைக்கழக நிர்வாகம் தரப்பில் கூறப்படும் விளக்கம் முற்றிலும் உண்மைக்கு மாறானது எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் சேர்க்கை இடங்களை உயர்த்தி வழங்குவதாகக் கூறி நிர்வாகம் மழுப்புவதும், தகுதியான மாணவருக்குச் சேர வேண்டிய சட்டப்பூர்வமான உரிமையை அநியாயமாகப் பறிப்பதும் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத செயலாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக ஆர்வலர்களின் புகாரின் அடிப்படையில் உயர்கல்வித்துறை உடனடியாகத் தலையிட்டுத் தற்போது சேர்க்கைப் பட்டியலை இடைநிறுத்தி (Stay) வைத்திருந்தாலும், இந்த விவகாரம் ஒரு தனிப்பட்ட மாணவரின் சேர்க்கைப் பிரச்சினை மட்டுமல்ல என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. மாறாக, தமிழ்நாடு பல தசாப்தங்களாகக் கடும் போராட்டங்களுக்குப் பிறகு பாதுகாத்து வரும் புனிதமான ‘சமூகநீதிக் கொள்கை’ இன்றைய உயர்கல்வி நிறுவனங்களில் முறையாகவும் நேர்மையாகவும் பின்பற்றப்படுகிறதா என்ற மிகப்பெரிய அடிப்படைக் கேள்வியை இந்தச் சம்பவம் எழுப்பியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, தமிழக முதலமைச்சரும், உயர்கல்வித்துறை அமைச்சரும் இவ்விவகாரத்தில் நேரடியாகத் தலையிட்டுத் தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பாரதிதாசன் பல்கலைக்கழகம் உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் சமூகநீதி இடஒதுக்கீடு சுழற்சி முறைப்படி துல்லியமாக நடைமுறைப்படுத்தப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும். மேலும், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இடஒதுக்கீட்டு விதிமுறைகள் மற்றும் 200-புள்ளி ரோஸ்டர் முறை முறையாகப் பின்பற்றப்பட்டதா என்பது குறித்து நடுநிலையான மற்றும் திறமையான அதிகாரிகளைக் கொண்டு உடனடியாக உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்விவகாரத்தில் பாதிக்கப்பட்டுள்ள சம்பந்தப்பட்ட மாணவருக்கு எந்தவிதமான காலதாமதமும் இன்றி உடனடியாக உரிய பாடப்பிரிவில் மாணவர் சேர்க்கை வழங்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சமூகநீதியின் முகவரியாகத் திகழ்ந்து வரும் தமிழ்நாட்டில், அதுவும் ஒரு அரசுப் பல்கலைக்கழகத்திலேயே இடஒதுக்கீடு விதிகள் புறக்கணிக்கப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. மாணவர்களின் உரிமைகளுக்கு எதிராகத் தவறான வழிகாட்டுதலை வழங்கிய பல்கலைக்கழக அதிகாரிகள் மீதும் உரிய துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என எஸ்.டி.பி.ஐ. தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.